tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : குயிலி நினைவு நாள்

ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரப்பெண்களில் வேலுநாச்சியாரும், குயிலியும் முக்கியமானவர்கள். அவர்களின் போர்த் தந்திரம், வீரம், விவேகம், சமூகநீதி, தாய்நாட்டுப்பற்று ஆகியவை நம் கண்முன் நிற்கின்றன.வேலுநாச்சியார், குயிலியை உடன்   வைத்திருக்கிறார்.  குயிலியைக் கொலைசெய்ய ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டினர்.  வேலுநாச்சியாரின் சிலம்பாட்ட ஆசிரியர் வெற்றிவேல் துரோகமிழைத்ததைக் கண்டு அவரது உயிரைப் பறித்தாள் குயிலி. இதையடுத்து மெய்க்காப்பாளரானார் குயிலி. மெய்க்காப்பாளரை ஏமாற்றி வேலுநாச்சியாரைக் கொலைசெய்ய ஆங்கிலேயர்கள்திட்டம் தீட்டினார்கள்.

மற்றொரு முறை ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நாச்சியாரை கொல்ல வந்த உருவம் வீசிய கத்தியை தடுத்து காப்பாற்றினாள். இதன் பிறகு குயிலியை , பெண்கள் படைக்குத் தளபதியாக  நியமித்தார். பிரான்மலையில் இருந்து வெள்ளச்சி நாச்சியாரை,  சிறைப்பிடித்து வேலுநாச்சியாரை வீழ்த்துவது என்பது ஆங்கிலேயர்களின் திட்டம். அதன்படி வெள்ளச்சி நாச்சியாரைச் சிறைப்பிடித்துக்கொண்டு, காட்டுவழியாக ஆங்கிலேயர்கள் வரும் செய்தி குயிலிக்கும், நாச்சியாருக்கும் கிடைத்தது. அங்கு சென்ற போது, ஆங்கிலேய சிப்பாய் வேலுநாச்சியாரை நோக்கி துப்பாக்கியை நீட்ட, உடனே குயிலி கொடுவாளைக்கொண்டு அவன் கையை வெட்டினாள். அடுத்தகணமே வேலுநாச்சியாரின் வாள், அந்த சிப்பாய் தலையைச் சீவியது. நாச்சியாரைப் பாதுகாப்பாக மீட்டு, விருப்பாச்சி அரண்மனைக்குக் கொண்டு வந்தனர். இந்நிலையில், சிவகங்கை அரண்மனையில் நவீன ஆயுதங்களும் கருமருந்து பொட்டலங்களும் வெடிப்பொருள் மூட்டைகளும் வாங்கிக் குவிக்கப்பட்டிருந்தன.

இந்தத் தகவல் குயிலிக்கு கிடைத்தது.  குயிலி முடிவு செய்துவிட்டாள். எப்படியாவது ஆயுதக்கிடங்கை அழித்துவிடவேண்டும் என்று. விஜயதசமி நாளன்று அரண்மனை ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் விழாக்கோலம் பூண்டிருந்தது. அந்த சமயம் பார்த்து ஆயுதக்கிடங்கில் விளக்குக்கு ஊற்றும் எண்ணெய்யை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு   தன் உடலில் தீவைத்துக்கொண்டு ஆயுதக்கிடங்குக்குள் குதித்தார் குயிலி. ஆயுதங்கள் முற்றிலும் கருகி சாம்பலாகின. தற்கொலைப்படை போராளியாக மாறிய குயிலியின் தியாகத்தால் சிவகங்கைச் சீமை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.‘சிவகங்கையில் குயிலிக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும்’ என தமிழக சட்டசபைத் தேர்தலின்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஅளித்த வாக்குறுதியைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டியது காலத்தின் அவசியம்.

=-==பெரணமல்லூர் சேகரன்===