tamilnadu

img

நவம்பர் 26 மறியல் போராட்டத்தை மகத்தான அளவில் வெற்றிபெறச்செய்திடுவோம் - அகில இந்திய விவசாய சங்கங்கள் அறைகூல்

நவம்பர் 26 அன்று கிராம அளவிலும், வட்டாரத் தலைநகர்களிலும் நடைபெறும் சாலை மறியல் போராட்டங்களை மகத்தான அளவில் வெற்றி பெறச் செய்திடுவோம் என்றும், போராட்டங்களின் மூலமாக தொழிலாளி-விவசாயி ஒற்றுமையை மேலும் வலுப்படுத்திடுவோம் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.

இது தொடர்பாக ஹன்னன்முல்லா பொதுச் செயலாளராக உள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கமும், அடுல் குமார் அஞ்சான் பொதுச் செயலாளராக உள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கமும் இணைந்து கூட்டாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

நவம்பர் 26 அன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைவாரி சங்கங்களின் கூட்டுமேடை சார்பில் அறிவிக்கப்பட்டு, தொழிலாளர் வர்க்கத்தால் மேற்கொள்ளப்படவிருக்கும் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஒருமைப்பாடு தெரிவிப்பதுடன், விவசாய சங்கங்கள் அறிவித்துள்ள கிராம அளவிலான மற்றும் வட்டார அளவிலான சாலை மறியல் போராட்டங்களையும் மகத்தான அளவில் வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்று இரு சங்கங்களின் சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம். கிராம அளவில் இயங்கிடும் இரு விவசாய சங்கங்களின் கிளைகளும், அங்கேயுள்ள தொழிற்சங்கங்களுடன் கைகோர்த்திட வேண்டும் என்றும், சாலை மறியல் போராட்டங்களை கிராம/வட்டார அளவில் அன்றைய தினம் நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் அறைகூவலுக்கிணங்க, ஹர்யானா, பஞ்சாப், மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள விவசாய சங்கங்களின் கிளைகள் தில்லியில் நடைபெறும் பேரணியில் பங்கேற்கும் விதத்தில் அணிதிரண்டு வருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

ஜார்கண்ட் மாநிலத்தில் இயங்கும் விவசாய சங்கங்கள் நவம்பர் 27 அன்று ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணியாகச் சென்று மனு அளித்திட வேண்டும்.

நவம்பர் 26-27 போராட்டங்களையொட்டி மிகவும் விரிவான அளவில் அனைத்துக் கிராமங்களிலும் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடுதல், சிறப்பு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்துதல், ஜீப்/சைக்கிள்/நடைப்பயணங்கள் முதலானவை மேற்கொண்டு போராட்டச் செய்தியை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல விரிவான அளவில் இயக்கங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. விவசாய சங்கங்களின் முக்கியமான கோரிக்கைகளில், கார்ப்பரேட் ஆதரவு மத்திய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும், மின்சார சட்டமுன்வடிவு ரத்து செய்யப்பட வேண்டும், தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகள் நலச் சட்டங்களாக மாற்றியிருப்பது ரத்து செய்யப்பட வேண்டும் ஆகியவற்றுடன், வேளாண் விளைபொருள்களுக்கு அவை உற்பத்திச் செய்யப்படும் செலவினத்துடன் ஒன்றரை மடங்கு உயர்த்தி, குறைநத்பட்ச ஆதாதர விலை நிர்ணயம் செய்திட வேண்டும், அனைத்து விவசாயப் பயிர்களையும் அரசே உத்தரவாதமான முறையில் கொள்முதல் செய்திட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் வேண்டும், விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் முழுமையான அளவில் வேலைகள் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளுடன் ஆங்காங்கேயுள்ள உள்ளூர் கோரிக்கைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

ஆர்எஸ்எஸ்/பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம் நவீன தாராளமய சக்திகளின்முன் மிகவும் இழிவான முறையில் சரணடைந்திருப்பதன் காரணமாக, சாமானிய மக்களின் துன்ப துயரங்கள் அதிகரித்து, வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஒருசில கார்ப்பரேட்டுகளின் கைகளில் செல்வங்கள் குவிவது என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பயங்கரமாக மாற்றியிருக்கிறது.

தொழிலாளர் வர்க்கமும், விவசாயிகளும் ஒன்றுபட்டு போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது சமீப காலங்களில் அதிகரித்திருப்பதை ஆகஸ்ட் 9 அன்றும், அடுத்து செப்டம்பர் 20 அன்று மத்திய வேளாண் சட்டங்களக்கு எதிராகவும் நடைபெற்ற தொழிலாளர்கள்-விவசாயிகளின் இயக்கங்களின் காண முடிந்தது.  இத்தகைய ஒற்றுமை வரவிருக்கும் காலங்களில் வளர்ந்திடும்.

இவ்வாறு ஹன்னன் முல்லாவும், அடுல் குமார் அஞ்சானும் தெரிவித்துள்ளார்கள்.

(ந.நி.

;