tamilnadu

img

உத்தரப்பிரதேச மாநில அரசு ஒரு  ‘போலீஸ் ஸ்டேட்’-ஆக மாறியிருக்கிறது சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்று உ.பி. மாநில அரசு ஒரு ‘போலீஸ் ஸ்டேட்’-ஆக மாறியிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

தலைநகர் தில்லியில், ‘பிரஸ் கிளப் ஆப் இந்தியா’ வளாகத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசாங்கம், மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியுள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு செய்தியாளர் கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுதும் ஜனவரி 19 அன்று கிளர்ச்சிப் போராட்டம் நடந்த சமயத்தில், உத்தரப்பிரதேச மாநில அரசு அதனை நசுக்கிட மேற்கொண்ட கொடூரமான நடவடிக்கைகள் குறித்து இங்கேயுள்ள நாங்கள் அனைவரும் ஆழ்ந்த கவலைக்குள்ளாகி இருக்கிறோம். குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அரசமைப்புச்சட்டத்திற்கு முரணான, அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரான இச்சட்டத்திற்கு எதிராக மக்களின் மகத்தான எழுச்சி நாடு முழுதும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம் மக்கள் அமைதியான முறையில் மேற்கொண்ட இக்கிளர்ச்சிப் போராட்டத்தின் மீது காவல்துறையினரின் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இதனை எதிர்கொண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு பழிக்குப்பழி வாங்குவோம் என்று அவர் கொக்கரித்தார். ஜனவரி 19இலிருந்து கடந்த மூன்று வார காலமாக நுற்றுக்கணக்கானவர்களை எவ்விதக் காரணமுமின்றி கைது செய்து, சிறையில்  அடைத்து, சித்திரவதை செய்துள்ளார். அவ்வாறு சிறையிலிடைக்கப்பட்டு காவல்துறையினரின் வன்முறைத் தாக்குதல்களுக்கு ஆளானவர்களில் ஒருசிலர் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை உங்கள் முன் எடுத்துரைப்பார்கள். 
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஒருவருக்குக் குடியுரிமை மதத்தின் அடிப்படையில் அளித்திட வகைசெய்யப்பட்டிருக்கிறது. இது நம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதும், எதிரானதுமாகும். 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கு முதன்முறைமயாக மதம் ஒரு காரணியாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மதச்சார்பற்ற ஜனநாயக்க் குடியரசு என்பது ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது. இவ்வாறு குடியுரிமைத் திருத்தச் சட்டம் நம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகவும், எதிரானதாகவும் ஆக்கப்பட்டிருப்பதால்தான் மக்கள் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட நாடு முழுதும் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள்.   இப்போராட்டமானது இந்தியாவில் நாட்டுப்பற்றைப் பிரதிபலிப்பதன் மிக உயர்ந்த வடிவமாகும். ஆனால் ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்? குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள் அனைவரும் தேச விரோதிகள் என்றும், அவர்கள் பாகிஸ்தானின் குரலை இங்கே எதிரொலிக்கிறார்கள் என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். என்னே முட்டாள்தனம்! இவ்வாறு நாட்டின் பிரதமரும், உள்துறை அமைச்சரும், உ.பி. முதலமைச்சரும் கிளர்ச்சியாளர்கள் மீது பாய்ந்துகொண்டிருக்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் 21 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும்தான் - உ.பி., அஸ்ஸாம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மட்டும்தான் - இவ்வாறு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் வன்முறை நிகழ்வுகள் கிடையாது.
பாஜக ஆளும் மாநில அரசுகள் மட்டும்தான் அமைதியான முறையில் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரு பாஜக தலைவர், இவ்வாறு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களை நாயைச் சுட்டுத்தள்ளுவது போல சுட்டுத்தள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். உ.பி.யில் ஓர் அமைச்சர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களை உயிரோடு புதைத்திடுவோம் என்று கொக்கரித்திருக்கிறார். உ.பி.யில் போலீசாரே சொத்துக்களை சேதப்படுத்திவிட்டு, அப்பாவி மக்கள் மீது இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இவ்வாறு கிட்டத்தட்ட ஒரு ‘போலீஸ் ஸ்டேட்’ (Police State)-ஆக உ.பி. மாறியிருக்கிறது. இது நிச்சயமாக நம் அரசமைப்புச் சட்டத்திற்கு  எதிரானதாகும். நம் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசுக்கு எதிரானதாகும்.
உ.பி. மாநில அரசு முஸ்லீம்களை மட்டும் வேட்டையாடவில்லை. வாரணாசியில் கைது செய்யப்பட்டு சிறையிலிடைக்கப்பட்டிருந்தவர்கள் 63 பேர். இவர்களில் 13 பேர் மட்டுமே முஸ்லீம்கள். மற்றவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார். மேலும் இக்கூட்டத்தில் உத்தரப்பிரதேச மாநிலக் காவல்துறையால்  தாக்குதலுக்கு உள்ளான முன்னாள் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஓய்வு), எஸ்.ஆர். தாராபுரி, நடிகையும் சமூகச் செயற்பாட்டாளருமான தஸ்தக் சடாப் ஜாபர், மற்றும் அமெரி கல்லூரி முன்னாள் விரிவுரையாளர் டாக்டர் பவார்  அம்பேத்கர், முதலானவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை எடுத்துரைத்தார்கள். இவர்கள் அனைவரும் ஜனவரி 19 அன்று கைது செய்யப்பட்டு, காவல்துறையினரால் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளானவர்கள். இக்கூட்டத்தில் பிருந்தா காரத்,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் து.ராஜா,  சரத் யாதவ்(ஐக்கிய ஜனதா தளம்), மனோஜ் ஜா (ஆர்ஜேடி) முதலானவர்களும் உரையாற்றினார்கள்.

(ந.நி)

   
;