tamilnadu

ராகுலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லி,ஏப்.23- பிரதமர் மோடியை திருடர் என நீதிமன்றமே தெரிவித்துவிட்டதாகக் கூறிய விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரபேல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.ராகுல்காந்தி தனது பிரச்சாரத்தில் ,காவலாளி எனக் கூறிக் கொள்ளும் மோடி ஒரு திருடர் என நீதிமன்றம் கூறிவிட்டதாகக் கூறி பாஜக எம்.பி. மீனாட்சிலேகி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ராகுல் காந்தி தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டதோடு, விளக்க மும் அளிக்கப்பட்டது.ஆனால் ராகுல் காந்தியின் விளக்கத்தில் திருப்தி இல்லை என கூறிய நீதிபதிகள், ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.மேலும் ரபேல் மறுசீராய்வு மனுக்கள் விசாரணைக்கு வரும் போது, ராகுல் காந்திக்கு எதிரான வழக்கையும் விசாரிக்க பட்டியலிடுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டனர். ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று மறு சீராய்வு மனுவுடன், ராகுல் காந்தி மீதான வழக்கு விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.