tamilnadu

img

பாஜக அரசுதான் தேச விரோத அரசாகும்: சீத்தாரம் யெச்சூரி

பாஜக அரசுதான் தேச விரோத அரசு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஜேஎன்யு வளாகத்தில் முன்னாள் மாணவர்களின் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஜேஎன்யு மாணவர் சங்கமும், ஜேஎன்யு ஆசிரியர் சங்கமும் ஏற்பாடுகள் செய்திருந்தன.  இதில் ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது: நான் அவசரநிலைக் காலத்தில் ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தேன். அந்த சமயத்திலும் போராட்டம் என்பது ஜனநாயகத்தைக் காப்பதற்காகவும், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காகவும்தான் நடைபெற்றது. இப்போது ஞாயிறு அன்று இரவு, மாணவர்கள் தாக்கப்பட்டு, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அங்கே விரைந்தோடிச் சென்று பார்த்தபோது, பாஜக எம்பி மீனாட்சி லேகி மற்றும் பாஜக-வின் மூத்த தலைவர்கள் பலர் அங்கே இருந்தார்கள். அவர்கள் என்னிடம் ஏபிவிபி மாணவர்களும் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள். எனினும், எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள், ஆட்சியாளர்களின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணியாது, உண்மையில் மருத்துவ கவனம் தேவைப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தார்கள்.
உங்களுடைய போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுங்கள். உங்கள் போராட்டம், அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாப்பதற்காக, நாட்டுப்பற்றைக் காட்டிடும் மிகவும் ஆழமான வடிவமாகும். இங்கே தேசவிரோதி என்று எவரையாவது கூற வேண்டுமானால் அது இந்த அரசாங்கம்தான். அவசரநிலைக் காலத்தின்போது பிரதமர் இந்திரா காந்தி இங்கே வந்தபோது, அவரை வளாகத்திற்குள் வர அனுமதிக்கவில்லை. பின்னர் நடைபெற்ற தேர்தலில், மாணவர் இயக்கத்தின் எழுச்சியால் அவர் தோற்கடிக்கப்பட்டார். இப்போதும் அதனை நாம் செய்ய முடியும்.” இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) சார்பில் கவிதா கிருஷ்ணன், ஜேஎன்யு மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் முதலானவர்களும் உரையாற்றினார்கள்.   

(ந.நி.