tamilnadu

img

இலக்கியத் தடம் பதித்த தொ.மு.சி.ரகுநாதன் - எஸ்.ஏ.பெருமாள்

கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 3

எழுத்தா ளர் புதுமைபித்தனால் தனது வாரிசு என்று அறிவிக்கப்பட்ட தோழர் தொ.மு.சி.ரகுநாதன் சுமார் 60 ஆண்டுகள் இடைவிடாமல் இடதுசாரி இலக்கிய பணியாற்றியவர். கதை, கவிதை, நாவல், நாடகம், விமர்சனம், வரலாறு, மதிப்பீடுகள் என்று 22 பெரிய நூல்களை எழுதியவர். போராடும் தொழிலாளிகளை நாவலின் மையத்திற்கு கொண்டு வந்த சாதனையாளர். பாரதி பற்றி மிகச் சிறந்த ஆய்வுகளை செய்தவர். இலக்கியத்தை சமுதாய நோக்கில் ஆய்வு செய்தவர். இலக்கியத்தில் சில ஆதிக்கப் போக்குகளை எதிர்த்து இன்றைய தமிழ் விமர்சனத்தின் தரத்தை மேம்படுத்தியவர். 

தோழர் ரகுநாதன் 20.10.1923ல் திருநெல்வேலியில் பிறந்தார். இந்துக் கல்லூரியில் இன்டர்மீடியட் வரை படித்தார். தனது சகதோழரான ராஜரத்தினத்துடன் இணைந்து மார்க்சிஸ்ட் மாணவர் இயக்கம் என்ற பெயரில் மார்க்சியக் கருத்துக்களை ‘சைக்ளோ’ செய்து ஜவகர் வாலிபர் சங்கம் மூலம் விநியோகித்துப் பரப்பி வந்தார். 1942ல் வெள்ளையனே வெளியேறு எனும் இயக்கம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது. நெல்லையில் கல்லூரி மாணவர்களும், உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின் மீது போலீஸ் கடுமையான தடியடி நடத்தியது. தொ.மு.சி உட்பட பலரும் காயமடைந்தனர். சில நாள் கழித்து ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக அவரைக் கைது செய்து இரண்டு மாதம் சிறையிலடைத்தனர். அத்தோடு அவர் படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. இதே காலத்தில் நெல்லை மாவட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பாளராக வந்த வி.பி.சிந்தன் தொ.மு.சியுடன் தொடர்பு கொண்டார். தொ.மு.சியின் ஈடுபாடு இலக்கியத்திலேயே அதிகமாக இருந்தது. எனவே 1942 முதலே எழுத்துத் துறையில் இறங்கினார். 1944 - 45ல் தினமணி ஆசிரியர் குழுவிலும் 1946 - 47ல் முல்லை பத்திரிகையின் ஆசிரியராகவும், 1948 - 52ல் சக்தி பத்திரிகையின் துணை ஆசிரியராகவும், 1954 - 56ல் சாந்தி பத்திரிகையின் ஆசிரியராகவும் 1967 - 88 வரை சோவியத் நாடு பத்திரிகையில் மூத்த ஆசிரியராகவும் பணியாற்றினார்.

1953ல் வெளிவந்த பஞ்சம் பசியும் நாவல். அந்தக் காலத்தில் பொதுவுடமை இயக்கத்தை நோக்கி ஈர்க்கப்பட்ட இளைஞர்களின் கரங்களிலெல்லாம் தவழ்ந்தது. வதைபடும் கை நெசவாளர்களைப் புரட்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் அதன் கதாநாயகர்களான சங்கர், ராஜா ஆகியோரை தொ.மு.சி. படைத்தார். அந்தக் காலத்தில் விவசாயத்திற்கு அடுத்த பெரிய தொழிலாகக் கைநெசவுத் தொழில் இருந்தது. மத்திய, மாநில அரசுகளின் ஜவுளிக் கொள்கையால் அந்தத் தொழில் கடந்த அரை நூற்றாண்டில் பெருமளவு அழிந்துவிட்டது. மானத்தை மறைக்க ஆடை நெய்யும் நெசவாளர்கள் தங்கள் மானத்தை இழந்து பிச்சையெடுப்பதையும், தற்கொலை செய்வதையும் இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். இதற்குக் காரணமானவர்களையும் அவர் முழுக்க அம்பலப்படுத்தியுள்ளார்.

“இந்த நாடு உருப்பட வேண்டுமானால், இங்கு ஒரு பெரும் அறிவுப் புரட்சி ஏற்பட வேண்டும். மக்களின் மூட நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் போக வேண்டுமென்றால் அவர்கள் நெஞ்சில் அறிவு சுடர் விட வேண்டும்,” “அறிவு வேண்டும், அந்த அறிவின் கொள்கை வெற்றி பெறப் போராட்டம் வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. பிரச்சாரம் உணர்வைத்தான் ஊட்டமுடியும். நடைமுறை இயக்கம்தான் உணர்வின் வெற்றியை உருவாக்க முடியும். கொள்கையும், நடைமுறையும், சிந்தையும், செயலும் ஒன்றுபட்டால்தான் விமோசனம் உண்டு” என்று தொ.மு.சி கூறியுள்ளார்.  அவரது பாரதியும் ஷெல்லியும் என்ற ஒப்பீட்டு இலக்கியம் மிகுந்த வீரியமிக்க நூலாகும்.  பாரதி : காலமும், கருத்தும் என்பது அவரது ஆற்றல்மிக்க ஆய்வுகளை கொண்ட பெருநூலாகும். இந்நூலுக்கு 1984ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. கார்க்கியின் தாய் நாவலை தமிழாக்கியதற்காக சோவியத் நாடு நேரு பரிசு வழங்கப்பட்டது. 

பஞ்சம் பசியும் நாவலும், ரகுநாதன் சிறுகதைகளும் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. பஞ்சம் பசியும் செக் மொழியில் ஐம்பதாயிரம் பிரதிகள் முதல் பதிப்பிலேயே விற்பனையானது. அவர் புதுமைப்பித்தனை மிகவும் நேசித்தார். அவரைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் எழுதி புதுமைப்பித்தனை ஒரு இலக்கிய இயக்கமாக்கினார். எதையும் ஆய்வு செய்து ஆதாரங்களைப் பொறுமையாய்த் தேடிச் சேகரித்த பின்பே எழுதும் பழக்கம் அவருக்கு இருந்தது. அவரது ‘இளங்கோவடிகள் யார்?’ என்ற ஆய்வு நூல் நாற்பதாண்டுகள் ஆய்வு செய்து எழுதப்பட்டது. ஏனோ அந்நூல் தமிழுலகில் அதிகம் பேசப்படவில்லை.    “மனிதனுக்குக் காதல் ஒன்றுதானா வாழ்க்கை? காதல் வாழ்க்கையின் ஒரு அம்சம். அதற்குப் பங்கம் நேர்ந்தால், வாழ்க்கையே அத்தோடு முடிந்துவிட்டது என்று அர்த்தமா? மனிதனுக்கு வாழ்க்கைதான் லட்சியம்.” “தற்கொலை செய்து கொள்வது ஒன்றும் துணிச்சலான காரியமல்ல. வாழ்க்கையில் விரக்தியடைந்த எந்தப் பைத்தியக்காரனும் லகுவாகச் செய்து கொள்ளக்கூடிய காரியம் அது. தற்கொலை என்பது கோழையின் கண்ணில்படும் முதல் புகலிடம். வாழ்க்கையின் சிரமங்களை எதிர்த்துப் போராடத் துணிச்சலற்றுத் தன்னைத் தானே ஒருவன் அழித்துக் கொள்வதா?” என்று கடுமையாய் எச்சரிக்கிறார்.

தொ.மு.சி இறுதிவரை தனது சுயத்தை இழக்காமல் கம்பீரமாகவே வாழ்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சி என்ற அமைப்புக்கும் தன்னை உட்படுத்திக் கொண்டார். இது ஒரு அபூர்வமாகும். அவரது ஆயிரக்கணக்கான நூல்களை எட்டயபுரம் பாரதி நூலகத்திற்குத் தானமாய் வழங்கினார். அதைப் பாதுகாத்து இயக்குவதில் தமிழ் ஆய்வாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கவனம் செலுத்த வேண்டும். தொ.மு.சி.யின் வாழ்வில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான சமரசமுமில்லை. வீழ்வதற்கான சறுக்கலுமில்லை. அவரது இறுதி நாட்களில் நெல்லையில் தனது நெருங்கிய சகாவான தோழர் தி.க.சி.யோடும், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கலை இலக்கியப் பெருமன்றத் தோழர்களோடும் நெருங்கிய நட்புக் கொண்டு, இலக்கிய வாழ்வைத் தொடர்ந்தார். 30.12.2001ல் அவர் மறைந்தாலும் அவரது படைப்புகள் தொடர்ந்து நமக்கு வழிகாட்டும். நிலைத்து நிற்கும். தொ.மு.சி.ரகுநாதன் எனும் மாமனிதரின் பெயர் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும்.

தொடரும்...

;