tamilnadu

img

அபாயகரமான பாதையில் விரைவாக நடக்கிறதா இந்தியா? -சு.வெங்கடேசன் எம்.பி

இந்திய அரசு கொரோனாத் தொற்றை எவ்வாறு கையாளுகிறது என்பதை இந்தியா டுடேயின் புள்ளியியல் ஆய்வு குழு (Data intelligence unit) அலசி ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாத் தொற்று, நூறிலிருந்து ஆயிரமாக 15நாள்களில் உயர்ந்தது. உலகத்திலேயே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம் கிடைத்தது. ஆனால், அதன் பின்னரான நாட்களில் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உயரத் தொடங்கியது.

உலக சுகாதர நிறுவனம் நாள்தோறும் வெளியிடுகின்ற தரவுகளை வைத்துப் பார்த்தால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி ஐயாயிரத்தை எட்டுவதற்கு இந்தியா எடுத்துக்கொண்ட நாட்கள் ஒன்பது.

மார்ச் 30ஆம் தேதி 1071ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஏப்ரல் 8ஆம் தேதி மாலையில் 5,000மாக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது நாட்களில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்தது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000த்தை தொட்டபோது பல்வேறு நாடுகளில் என்ன நடந்து கொண்டிருந்தது?

நோயாளிகளின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தொட்டசமயத்தில் உலக நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் முதல் இடத்தைப் பிடித்தது ஸ்வீடன் நாடு. ஏப்ரல் மூன்றாம் தேதியன்று ஸ்வீடெனில் பாதிக்கப்பட்டவர்கள் 5,446பேர், உயிரிழந்தவர்கள் 282பேர்.

ஸ்வீடனுக்கு அடுத்த இடத்தில் உள்ளது நெதர்லாந்து; அங்கு உயிரிழந்தவர்கள் 276பேர். இத்தாலியில் 234 பேர், இங்கிலாந்தில் 233 பேர். பெல்ஜியத்தில் 220 பேர். டென்மார்க்கில் 203 பேர்.
அந்த சமயத்தில் 149 பேர் இந்தியாவில் உயிரிழந்திருந்தனர். இது உலகத்தில் எட்டாவது இடத்தை இந்தியாவிற்கு பெற்றுக்கொடுத்தது. இந்தியாவிற்கு அடுத்து பிரான்ஸில் 148பேர், ஸ்பெயினில் 136 பேர், அமெரிக்காவில் 100 பேர் என உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் கொண்டிருக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000யைக் கடந்த பிறகும் குறைவான உயிரிழப்புகள் நடைபெற்றது ஜெர்மனி நாட்டில். மார்ச் 7இல் 6,012பேரை நோய் தோற்றிருந்தது; உயிரிழந்தோர் 13பேர்.

இந்தத் தரவின் மூலம் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எப்படி அதிகமாக உயர்ந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

நோய் முதலாவதாகத் தொற்ற ஆரம்பித்த சீனாவிற்கு அடுத்த நான்கு நாடுகளில் தொற்று ஆயிரத்திலிருந்து ஐயாயிரமாக 6 நாள்களில் உயர்ந்தது. ஸ்பெயின், துருக்கி, ஈரான் இந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை உயர்வதற்கு 5 நாள்களும் அமெரிக்காவில் 6 நாளும் ஆகின.

இந்த அளவிற்கு எண்ணிக்கை உயர்வதற்கு 7 முதல் 10 நாள்கள் எடுத்துக்கொண்ட நாடுகள் 13. அதில் இந்தியாவும் அடக்கம். மிகப்பெரிய உயிரிழப்பைச் சந்தித்த இத்தாலி நாட்டில் இந்த எண்ணிக்கை ஏழு நாள்களில் உயர்ந்தது, பிரிட்டன், சுவிஸ், தென் கொரியா போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை ஏழு நாள்களில் உயர்ந்தது.

பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் எடுத்துக்கொண்ட நாள்கள் எட்டு. கனடா, பிரேசில், போர்ச்சுகல், இந்தியா ஆகிய நாடுகளில் இந்த எண்ணிக்கை உயர்வு ஒன்பது நாள்களில் நடந்தது. மேலும் ஒன்பது நாடுகளில் இந்த உயர்வு 10 நாளில் நடைபெற்றது.

இங்கே ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது, இந்தியா திறமையாக நிலைமையைக் கையாள்கிறது என்று, ஆளும் மத்திய அரசிலும் மாநில அரசுகள் சிலவற்றிலும் நடவடிக்கைகளில் மிகப்பெரிய போதாமை உள்ளது என்று எதிர்க்கட்சிகளும் சமூக இயக்கங்களும் தெரிவித்துவருகின்றன. ஆளும் தரப்புகள் மறுத்தாலும் தரவுகளின் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடிவது இதுதான்.

சுருக்கமாக ஒப்பிடுவதாக இருந்தால் நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்திலிருந்து ஐயாயிரம் ஆவதற்கு இந்தியா எடுத்துக்கொண்ட நாட்கள் ஒன்பது, அமெரிக்கா எடுத்துக்கொண்ட நாட்கள் ஆறு. ஆனால் அமெரிக்காவின் உயிரிழப்பு 100; இந்தியாவின் உயிரிழப்பு 149. அதாவது அமெரிக்காவைவிட மூன்றில் ஒரு பங்கு அதிகம்.

அதுமட்டுமல்ல, இன்றைய உலகின் கொரோனா வைரசால் மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, ஸ்பெயின், சீனா, பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளைவிட இந்தியாவின் உயிரிழப்பு அதிகம்.

நாம் எவ்வளவு ஆபத்தான பாதையில் வேகமாக போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை இந்த ஒரு புள்ளிவிபரமே தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

உலகசுகாதார நிறுவனம் கோவிட்-19 ஐ உலகப் பெருந்தொற்றாக அறிவித்தது மார்சு11 ஆம் தேதி. ஆனால் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்வதற்கான வழிகாட்டலை மத்திய அரசு ஏப்ரல் 7ஆம்தேதிதான் அறிவிக்கிறது. அதாவது இந்தியாவில் முதல் நோயர் கண்டறிப்பட்ட 68 ஆம் நாள் தான் சிகிச்சைக்கான வழிகாட்டலை மத்திய அரசு வெளியிடுகிறது.
கேரள அரசு மட்டுமே மார்ச் 7ஆம் தேதி கோவிட்-19 சிகிச்சைகான வழிகாட்டல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதற்குப் பின்பும் மத்திய அரசு வழிகாட்டலை வெளியிட ஒரு மாதம் ஆகிறது. இந்த நிலையில் N-95 முகக்கவசமும் தற்கவச ஆடையும் (PPE) மாநில அரசுகள் வாங்க வேண்டாம். நாங்கள் தருகிறோம் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பிக்கொண்டிருக்கிறது. இவர்கள் நிலமையை என்னதான் மதிப்பிடுகிறார்கள்?

குரோனோ வைரஸ் தொற்று என்பது அதிகாரத்தை மையப்படுத்துவதற்கான வாய்ப்பு மட்டுந்தானா? கோடான கோடி இந்திய மக்களின் உயிர்வாழ்வுப் பிரச்சனையல்லவா?

அரசுகளின் நடவடிக்கைகளில் தேக்கமும் குழப்பமும் பெரும்பற்றாக்குறையும் நிலவுகிறது. உடனடியாக சரிசெய்யும் நடவடிக்கைகள் தேவை.

பின்னர் சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் அது எத்தனை ஆயிரம் உயிர்களுக்குப் பின்னர்?
#coronaupdatesindia #covid_19 #maduraiMPrequests #coronatest