tamilnadu

img

மாதம் ரூ.7500 கொடுங்கள், வேறு வழியில்லை... மோடி அரசுக்கு பொருளாதார அறிஞர் பேரா. பிரபாத் பட்நாயக் வலியுறுத்தல்...

புதுதில்லி:
சரிவின் விளிம்பில் நிற்கும் இந்தியப் பொருளாதாரம் பேரழிவை சந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால் உடனடியாக மக்களின் கைகளில் மாதம் ரூ.7500 பணமாக அளித்திடுங்கள் என்ற இடதுசாரிக் கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டில் அவர் எழுதியுள்ள பொருளாதாரக் குறிப்புகளில் கூறியிருப்பதாவது:

2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜுன் வரையுள்ள முதல் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மைனஸ் 24 சதமாகக் குறைந்துபோயுள்ளது. அறிவுசார் தளங்களில் உள்ளவர்கள் ஊரடங்கு காரணமாக பொருளாதாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள உண்மை வீழ்ச்சியை இந்த மதிப்பீடு வெளிப்படுத்தவில்லை, இது குறை மதிப்பீடாகவே உள்ளது என்கின்றனர். முன்னாள் இந்திய தலைமை புள்ளியியல் நிபுணர் பிரணாப் சென், உண்மை பொருளாதார வீழ்ச்சி கிட்டத்தட்ட 32 சதம் என மதிப்பீடு செய்கிறார்.  மற்றவர்கள் இன்னும் உயர் இலக்க மதிப்பீடுகளை செய்துள்ளனர்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக, உடனடியாக வேலை இழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் உள்ள தங்கள் கிராமங்களுக்கு கால்நடையாக நீண்டதொரு கடினமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு அரசால் எந்த உதவியும் வழங்கப்படவில்லை. மற்ற நாடுகளில் அரசாங்கத்திடம் இருந்து நாடு தழுவிய அளவில் மக்களுக்கு உணவு அல்லது நிதியுதவி செய்யப்பட்டது போல் நமது நாட்டில் எதுவும் செய்யப்படவில்லை. அமெரிக்காவில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் நிவாரண உதவி செய்யப்பட்டது. ஜெர்மனியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதம் மற்றும் ஜப்பானில் இன்னும் அதிகமான சதவிகிதத்தில் நிவாரண உதவி செய்யப்பட்டது.  இந்தியாவில் மொத்த நிவாரண உதவியையும் கணக்கிட்டுப் பார்த்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1 சதவீதம் மட்டுமே இருந்தது. 

இந்தியப் பொருளாதாரம் சந்தித்துள்ள பேரிடர் என்பது நாம் இப்போது சந்தித்து அனுபவித்தவற்றில் முடிந்துவிடவில்லை. மாறாக இனிமேல் நாம் என்ன எதிர்கொள்ளப் போகிறோம் என்பதில் இருக்கிறது. ஊரடங்கின் போது, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளார்கள், அதன் காரணமாக, வருமானத்தை இழந்துள்ளார்கள்.  அவர்கள் உயிர் வாழத் தேவையான வாழ்வாதார பராமரிப்பிற்கே கூட அவர்கள் அதுவரை சேமித்து வைத்திருந்த சேமிப்புகளை தான் பயன்படுத்த வேண்டும் அல்லது மற்றவர்களிடமிருந்து கடன் வாங்க வேண்டும்.  ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டால், அவர்கள் ஏற்கனவே சேமித்து வைத்திருந்து தீர்ந்து போனவற்றை சேமிக்க வேண்டும் அல்லது அவர்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். எனவே ஊரடங்கிற்குப் பிறகு வேலை கிடைத்தால், தங்கள் முழு வருமானத்தையும் தங்கள் வாழ் நாளின் நுகர்விற்கு பயன்படுத்த முடியாது. அதில் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவார்கள்.   உண்மையில் அவர்கள் பொதுவாக இதற்கு முன்பு நுகர்ந்ததை விட ஒரு சிறிய பகுதியையே அவர்கள் நுகர்வார்கள்.

மேலும் பொருளுற்பத்தி என்பதும், ஊரடங்கிற்கு முன்பு இருந்ததை விட சில காலம் குறைவாகவே இருக்கும். முதலீடும் வீழ்ச்சியடையும்; ஏற்கெனவே இருக்கும் திறனைப் பயன்படுத்துவதில் கூட வீழ்ச்சி இருக்கும்.  இவையெல்லாம் நிகழ்ந்தால், உற்பத்திப் பொருட்களுக்கான கிராக்கி மேலும் வீழ்ச்சியடையும், கிராக்கி வீழும்போது பொருளுற்பத்தி, திறன் பயன்பாடு மற்றும் முதலீடு ஆகியவை அனைத்தும் சுருங்கும். பொருளாதாரம் கீழ்நோக்கிய சரிவின் சுழலை சந்திக்கும், இதனால் ஊரடங்கிற்கு முன்பு இருந்ததை விட மிகக் குறைந்த அளவிலான பொருளுற்பத்திக்கு இட்டுச் சென்று வேலையின்மையை அதிகரிக்கும்.ஏற்கனவே ஊரடங்கிற்கு முன்பே வேலையின்மை மிக அதிகரித்த நிலையில் இருந்தது.  பொருளாதாரம் கீழ்நோக்கிய சரிவின் சுழலை சந்திக்கும் போது அது ஒரு பொருளாதாரப் பேரிடராகவே அமையும். மேலும் என்ன நிகழுமென்றால், உண்மைப் பொருளாதாரம் இத்தகையகீழ்நோக்கிய சுழற்சியில் இருப்பதால் வராக்கடன்களின் காரணமாக நிதித்துறை மேலும் மோசமடையும், அதனால் நிதித்துறை அழிவினை சந்திக்கும். எனவே, அரசாங்க தலையீடு இல்லாமலே போனால், இந்திய பொருளாதாரம் பேரிடரை சந்திப்பது உறுதியாகும்.

இத்தகைய பேரிடரைத் தடுக்க வேண்டுமென்றால், பொருளாதாரத்தில் போது மான கிராக்கியை ஏற்படுத்துவதற்காகஅரசாங்கம் தலையிட  வேண்டும். அவ்வாறு கிராக்கியை உருவாக்கிட இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, அரசாங்கத்தின் சொந்த செலவினங்களை அதிகரிப்பது; குறிப்பாக மருத்துவ சுகாதாரத் துறையிலும் மற்றும் இதே போன்ற பல்வேறு துறைகளிலும் அரசின் செலவினங்களை அதிகரிக்க வேண்டும்.வாங்கும் சக்தியை மக்களின் கைகளில் அதிகரிப்பதன் மூலம் அரசாங்கம் பொருளாதாரத்தில் கிராக்கியை உண்டு பண்ணவும், அதிகப்படுத்தவும் முடியும். இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்துடன்,  வருமான வரி செலுத்தாத ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ஒன்றிற்கு ரூ .7,500 கொடுக்கும் திட்டத்தையும் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று இடதுசாரி சக்திகளும், முற்போக்கு ஜனநாயக சக்திகளும் கோரி வருகின்றன. இந்த கோரிக்கையை அரசாங்கம் இப்போது வரை புறக்கணித்து வருகிறது. மத்திய அரசாங்கம் உடனே அத்தகைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஆரம்பத்தில் ரிசர்வ் வங்கியில் இருந்து கடன் பெறுவதன் மூலமாக அரசின் நிதிப் பற்றாக்குறையை விரிவுபடுத்தி, பொருளாதாரத்தில் நேரடியாககிராக்கியை உருவாக்க வேண்டும்; ரிசர்வ் வங்கியில் கடன் வாங்க வங்கிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அதே வட்டி விகிதத்தில் மத்திய அரசாங்கம் இந்த கடனை வாங்க வேண்டும். பின்னர் பொருளாதாரம் ஓரளவு நிலைபெற்றவுடன் நிதிப்பற்றாக்குறையின் காரணமாக  ஏற்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமனப்படுத்த, மத்திய அரசு பெரும் செல்வந்தர்கள் மீது செல்வ வரியை விதிக்க வேண்டும்.மேலும் மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடுகளை உடனடியாக மத்திய அரசாங்கம் கொடுக்க வேண்டும். இதனால், பேரிடரை சந்திக்கவிருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதோடு, மத்திய அரசாங்கத்தின் அரசியலமைப்பு கடமைகளையும் பொறுப்பு களையும் நிறைவேற்ற முடியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொகுப்பு : ஆர்.எஸ்.செண்பகம்
 

;