tamilnadu

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க மறுப்பது அரசியல் சட்டவிரோதம்.... பேரா.பிரபாத் பட்நாயக் குற்றச்சாட்டு

புதுதில்லி:
ஜிஎஸ்டி வருவாயில் மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் மத்திய அரசுஏமாற்றுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும் என்று பொருளாதார அறிஞர் பேரா.பிரபாத் பட்நாயக் கூறியுள்ளார். இதுதொடர்பாக பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டபோது, மாநிலங்களுக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஏற்படும் எந்தவொரு வருவாய் பற்றாக்குறையையும் மத்திய அரசு ஈடுசெய்யும் என்று உறுதிமொழியை அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை சட்டப்பூர்வமாக்கும் வகையில், ஜிஎஸ்டி (மாநிலங்களுக் கான இழப்பீடு) சட்டம் 2017 ஐ நாடாளுமன்றம் இயற்றியது.ஆனால், மத்திய அரசு தனது வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, இழப்பீட்டுத் தொகை தருவதாகக் கூறிய வாக்குறுதியையே கைவிட்டுவிட்டது. இந்த சிக்கல் ஆகஸ்ட் 2019 இல் தொடங்கியது. ஆனால் கோவிட் தொற்றின் காரணமாக நடப்பு நிதியாண்டில் நிலைமை தீவிரத்தன்மையை எட்டியுள்ளது. ஒருபுறம் தொற்று நோய் பரவலின் தொடர் விளைவுகள் ஜிஎஸ்டி வருமானத்தையும் கடுமையாகக் குறைத்துள்ளது. அதனால் மாநிலங்களின் பங்கும் குறைந்து போயுள்ளது. அதேநேரத்தில் மாநிலங்களின் செலவுத் தேவைகளும் பெரிதும் அதிகரித்துள்ளது. 

கணக்கீடு செய்தால் 2020-21க்கான மாநிலங் களுக்கான இழப்பீட்டுத் தொகை மட்டுமே ரூ.3 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசாங்கம் வசூலித்துள்ள செஸ் வரியில் இருந்து ரூ.65,000 கோடி மட்டுமே வழங்கப்படும். மீதமுள்ள ரூ.2.35 லட்சம் கோடியை மத்திய அரசாங்கம் வழங்க மறுக்கிறது. கடந்த ஆகஸ்ட் 27 அன்று நடந்த  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த தொகையை கடன் வாங்கி சமாளித்துக் கொள்ளுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.மத்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, மத்திய அரசாங்கம் தானே அளித்திருந்த உறுதிமொழியை மீறும் செயல்மட்டுமல்ல, நாடாளுமன்றச் சட்டத்தையும் மீறும் செயலாகிறது. இந்த சட்டத்தின்அடிப்படையில்தான் அரசியலமைப்பு சட்டத்தின் வாயிலாக தங்களுக்களிக்கப்பட்டிருந்த உரிமைகளை மாநிலங்கள் விட்டுக் கொடுத்துவிட்டு, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும் அரசியலமைப்பு சட்ட திருத்தங்களை இயற்ற ஒப்புக்கொண்டன.  அரசியலமைப்பு மூலம் செய்யப்பட்ட  புதிய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு கடமையை மத்திய அரசாங்கம் தற்போது செய்ய மறுக்கிறது. இரண்டாவதாக, மத்திய அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டின் பின்னால் எந்தவிதமான பொருளாதார தர்க்க நியாயமும் இல்லை.

மத்திய அரசாங்கம் பெரிய அளவில் கடன் வாங்கும்போது பொருளாதாரத்தில்  என்ன விளைவு ஏற்படுமோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் மாநிலங்கள் கடன் வாங்கினாலும் ஏற்படும். ஆனால், மத்திய அரசாங்கம் மாநிலங்களை கடன் வாங்குமாறு கூறுகிறது.  மாநிலங்கள் ரூ. 2.35 லட்சம் கோடி அளவிற்குகடன் வாங்குவது பாதுகாப்பாக இருக்கும் என்றும், அதன் மூலம் பெறப்படும் வருமானத்தை கூடுதல் செலவாக பொருளாதாரத்தில் செலுத்தலாம் என்றும் மத்திய அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது. அப்படியானால், மத்திய அரசாங்கமே இந்த கடனை வாங்கி அதில் கிடைக்கும் வருமானத்தை ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக மாநிலங்களுக்கு ஏன் ஒப்படைக்க முடியாது என்ற கேள்வி எழுகிறது. 

மத்திய அரசாங்கமே சொல்வது போல, இப்படி கடன் வாங்க வேண்டிய அவசியம் எழுந்ததே “கடவுளின் செயலால்” எனும்போது,  இந்த கடன் தொகையை ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகளுக்கு அளிக்கும் ரெப்போ விகிதத்திலேயே வழங்குமாறு மத்திய அரசாங்கம் கேட்க முடியும். மத்திய அரசாங்கம் அதன் ஜிஎஸ்டி இழப்பீட்டு கடமைகளை பூர்த்தி செய்வதற்காக ரிசர்வ் வங்கியில் ரெப்போ விகிதத்தில் கடன் வாங்குவது என முடிவெடுத்தால் ஒரே கல்லில் பல மாங்காய்களை பறிக்க முடியும். முதலாவதாக, இது 2017 சட்டத்தில் உறுதியளித்தபடி அதனுடைய அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்று வதற்கு உதவுகிறது. இரண்டாவதாக, இது மாநில அர சாங்கங்களை எந்தவொரு சிரமத்திற்கும் உட்படுத்தாமல், கூட்டாட்சி கட்டமைப்பை பலப்படுத்த உதவுகிறது. மூன்றாவதாக, இது குறைந்த வட்டி வீதத்தை நோக்கி நகரச் செய்து, பணப்புழக்கத்தின் எளிதான நிலையை நோக்கி நகர்த்துவதன் காரணமாக, பொருளாதார சரிவினை நல்ல முறையில் சமாளிக்க உதவும்.
ஆனால், மோடி அரசாங்கத்திற்கு பொருளாதாரம் குறித்த போதுமான புரிதல் இல்லை.  மேலும், மாநிலங்களை அணுகும் முறையில் போதுமான அக்கறையும், அனுதாபமும் இல்லை.   அதனால், மோடி அரசாங்கத்தால் இந்த வெளிப்படையான நன்மைகளைக் கூட காண முடியவில்லை.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பாஜக ஆட்சி செய்கின்ற இரண்டு மாநிலங்களைத் தவிர, அனைத்து முக்கிய மாநிலங்களும், மாநிலங்கள் தங்கள் ஜிஎஸ்டி இழப்பீட்டின் பற்றாக்குறையைச் சரிசெய்ய கடன் வாங்க வேண்டும் என்ற மத்திய அரசாங்கத்தின் முன்மொழிவினை நிராகரித்துள்ளன. குறிப்பாக இந்த முன் மொழிவிற்கு எதிராக கேரள அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நமது நாட்டின் கூட்டாட்சி தத்துவ அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், மாநிலங்களுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய தொகை செலுத்தப்பட வேண்டியது மிக முக்கிய அவசியமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

====தொகுப்பு : ஆர்.எஸ்.செண்பகம்=====