tamilnadu

img

ஜனவரி 19 - தியாகிகள் நினைவு ஜோதிகள் புறப்படுகின்றன

சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு

சென்னை, ஜன. 10 - சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு ஜனவரி 23-27 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இதனையொட்டி ஜனவரி 19 அன்று தியாகிகள் நினைவு ஜோதி பயணம் 7 மையங்களில் இருந்து புறப்படுகிறது. 1982 ஜன.19 அன்று நடைபெற்ற பொதுவேலை நிறுத்தத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகிய 3 தொழிலாளர்கள் களப்பலியாகினர். இந்த நாளை தியாகிகள் நினைவு நாளாக சிஐடியு கடைப்பிடித்து வருகிறது. ஜன.19 அன்று தொடங்கும் தியாகிகள் நினைவு ஜோதி பயணக்குழுக்கள் அனைத்தும் ஜன.22 அன்று சென்னையை வந்தடைகின்றன.

வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி

நாகப்பட்டினம் மாவட்டம், வெண்மணி கிராமத்திலிருந்து வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி புறப்படுகிறது. சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் தலைமையிலான ஜோதிப் பயணத்தை, அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்க தலைவர் க. சுவாமிநாதன் துவக்கி வைக்கிறார். இக்குழு திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் வழியாக பயணித்து சென்னையை வந்தடைகிறது.

தோழர் லீலாவதி நினைவு ஜோதி

மதுரை மாநகரிலிருந்து புறப்படும் தோழர் லீலாவதி நினைவு ஜோதி, சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர். தெய்வராஜ் தலைமையில் புறப்படுகிறது. இந்த ஜோதிப் பயணத்தை சு. வெங்கடேசன் எம்.பி., துவக்கி வைக்கிறார். இக்குழு மதுரை புறநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக பயணித்து சென்னை வந்தடையும். 

தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவு ஜோதி

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையிலிருந்து தோழர் ஜே. ஹேமச்சந்திரன் நினைவு ஜோதி புறப்படுகிறது. சிஐடியு மாநிலச் செயலாளர் கே. தங்கமோகன் தலைமையிலான இந்த நினைவு ஜோதியை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி துவக்கி வைக்கிறார். இந்தக்குழு தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் வழியாக சென்னை வந்தடைகிறது. 

தோழர் வி.பி.சிந்தன் நினைவு ஜோதி

சென்னையிலிருந்து (ஓட்டேரி) தோழர் வி.பி.சிந்தன் நினைவு ஜோதி புறப்படுகிறது. சிஐடியு மாநிலச் செயலாளர் சி. திருவேட்டை தலைமையிலான இந்த நினைவு ஜோதி பயணத்தை மூத்த தொழிற்சங்கத் தலைவர் வே. மீனாட்சிசுந்தரம் தொடங்கி வைக்கிறார். இக்குழு திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக பயணித்து மீண்டும் சென்னையை வந்தடைகிறது.

சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு ஜோதி

கோயம்புத்தூரிலிருந்து புறப்படும் சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு ஜோதி குழுவிற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்குகிறார். இந்தக்குழுவின் பயணத்தை பி.ஆர். நடராஜன் எம்.பி., துவக்கி வைக்கிறார். இக்குழு நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக சென்னை வந்தடைகிறது. 

புதுச்சேரி தியாகிகள் நினைவு ஜோதி

புதுச்சேரியிலிருந்து, புதுச்சேரி தியாகிகள் நினைவு ஜோதி புறப்படுகிறது. சிஐடியு மாநில உதவி பொதுச் செயலாளர் வி. குமார் தலைமையிலான இக்குழுவின் பயணத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் எஸ். வாலண்டினா துவக்கி வைக்கிறார். இந்தக்குழு கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக சென்னை வந்தடைகிறது.

பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி

திருச்சி மாவட்டம், பொன்மலை ரயில்வே சங்க அலுவலகத்திலிருந்து ஜன.21 அன்று பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி புறப்படுகிறது. சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர். சிங்காரவேலு தலைமையிலான இந்த ஜோதி பயணத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  தலைவர் மு. அன்பரசு துவக்கி வைக்கிறார். திருச்சி மாநகர், திருச்சி புறநகர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இந்தக்குழு பயணித்து சென்னையை வந்தடைகிறது.






 

;