tamilnadu

img

நிதிஷ் மீண்டும் வந்தார்; ஆனால் நான் சேர்த்துக் கொள்ளவில்லை! லாலு களத்தில் இறங்கினார்

பாட்னா, ஏப்.7-

ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவரான நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியுடன் சேர்ந்து, 2015-ஆம் ஆண்டு பீகாரில் ஆட்சியைப் பிடித்தார். பின்னர் திடீரென பாஜக கூட்டணிக்குத் தாவினார். எனினும் முதல்வர் பதவியை மட்டும் அவர் விடவில்லை. இந்நிலையில், பாஜக கூட்டணியில் சேர்ந்த 6 மாதத்திற்குப் பிறகு, மீண்டும் பழைய கூட்டணியிலேயே சேர விரும்புவதாக, நிதிஷ் குமார் தூதுஅனுப்பியதாகவும், ஆனால், தான் அதை நிராகரித்து விட்டதாகவும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் கூறியுள்ளார்.லாலு எழுதி விரைவில் வெளியாகவுள்ள புத்தகத்தில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.“பாஜக-வுடன் சேர்ந்து ஆட்சியமைத்த அடுத்த 6 மாதத்திற்குள், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இணைவதற்கு நிதிஷ் குமார் விரும்பினார். இதற்காக அவரது கட்சியின் துணைத்தலைவரும், நிதிஷின் நம்பிக்கைக்கு உரியவருமான பிரசாந்த் கிஷோரை, ஐந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் என்னைச் சந்திக்க அனுப்பினார். ஆனால், அந்த வாய்ப்பை நான் மறுத்து விட்டேன். எனக்கு நிதிஷ்குமாரின் மீது வெறுப் பில்லை. ஆனால் அவர்மீது வைத்திருந்த நம்பிக்கையை ஏற்கெனவே இழந்து விட்டேன்” என்று லாலு கூறியுள்ளார்.