tamilnadu

img

பயணங்கள் முடிவதில்லை - நா.வே.அருள்

சைமன் ஃபிரேசர் பல்க  லைக் கழகம் 2019 ஜூன்  12 ஆம்நாள் நடத்திய பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் பெற்ற முதல்  நாட்டவர் ராபர்ட் ஜோசஃப்.  அவரிட மிருந்துதான் அருள்பாரதி தனது எம்.எஸ் மேல் படிப்புக்காகப் பட்டம் பெற்றுக் கொண்டான். இதையொட்டி அவன் அழைத்ததன் பேரில்தான் நாங்கள்  கனடா சென்றோம்.   அந்தத் தருணம்  என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணமாக அமைந்துவிட்டது.  முதல்  நாட்டவர் (அதாவது பழங்குடி யினத்தைச் சேர்ந்தவர்)  தனது ஏற்புரை யின் போது  கனடாவின் மீது இனப் படு கொலைப் பழி இருப்பதாகவும் ஜனநாய கத்துக்காவும் எல்லோரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்பதற்காகவும்  பல அறிவார்ந்தவர்கள் பேசுகிறார்கள் என்று குறிப்பிட்டது என் சிந்தனை களைக் கிளர ஆரம்பித்தது. கனடாவின் வரலாற்றை மிக மிகச் சுருக்கமாக அறிந்து கொள்ள வேண்டுமென்னும் ஆவலை உண்டாக்கியது.   கனடாவின் வரலாற்றுச் சுருக்கம் மிகவும் சுவையானது.  கனடா நாட்டின்  மேற்குப் பகுதியில் இயற்கையின் பேரெழிலாக இருக்கிற மலையக வனதேவதைதான் பிரிட்டிஷ் கொலம்பியா.  பசிபிக் கடலின் மடியில் இருக்கும் இந்த அழகிய ராட்சசியுடன்  வான்கூவர் தீவு இணைந்தது 1966 ஆம்  ஆண்டில்தான். அதன் பிறகுதான் 1871 இல் கனடாவின் ஆறாம் நிலப்பகுதி யானது பிரிட்டிஷ் கொலம்பியா. 2018 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை சுமார் ஐம்பது லட்சம்.   இதன் தலை நகரம் விக்டோரியாவாக இருந்தபோதும் மிகப் பெரும் நகரமாக  இருப்பது வான்கூவர்.

உலகில் ஒருபுறம் பிரிட்டிஷ் காலனி யாக்கமாக அமெரிக்கா.  கி.பி 1607 இல் வெர்ஜினியாவின் ஜேம்ஸ் டவுனில் தொடங்கி அமெரிக்கா முழுவதும் ஆதிக்கத்தைத் தொடர்ந்தனர். பலன் பசிபிக் கடற்கரையில் இரண்டாம்  இங்கிலாந்தாக பிரிட்டிஷ் கொலம்பியா.  மறுபுறம் பிரெஞ்சுக் காலனியாக்க மாக அமெரிக்காவின் மேற்குப் பகுதி  முழுவதும் தொடர்ந்தது.  பெரும்பா லான கிழக்கு வடஅமெரிக்கப் பகுதியில்  பல கரீபியத் தீவுகளில் பிரெஞ்சு ஆதிக்கம். பலன் வட அமெரிக்காவில் நியூ பிரான்சு. மிகப் பிரபலமான பிரான்சின் ‘ஏழு  ஆண்டுப் போர்’ முடிவில் பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது.  அதன்படி கி.பி.1743 இல் பிரான்சின் அனைத்து வட அமெரிக்கப் பகுதி களும் பிரிட்டிஷாருக்குச் சொந்தமா னது. கனடாவும் நம் நாட்டைப்போலவே  வெள்ளையருக்கு அடிமையாக இருந்த நாடுதான்.  கனடா நாட்டில்  (அப்போது கனடா வட அமெரிக்கா வின் பகுதியாக இருந்தது) ஆங்கிலேய னின் முதல் குடியேற்றம் விக்டோரியா துறைமுகத்தில் 1843 ஆம் ஆண்டு நடந்தது. அதுதான் பின்னர் விக்டோ ரியா நகரமாக உருவானது.  வான்கூவர்  தீவின் முதல் தலைநகரம் விக்டோரியா தான். 1858 முதல் 1866 வரையிலு மான காலகட்டத்தில் ஃபிரேசர் கன்யான்  கோல்ட் ரஷ் அவர்களின் வேண்டு கோளக்கிணங்க ரிச்சர்ட் கிளமண்ட் மூடியும் ராயல் பொறியாளர்களும் இணைந்து பிரிட்டிஷ் கொலம்பியாவை உருவாக்கினார்கள். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மேற்குத் திசையின் தொலைதூர பாதுகாப்பு அரணாகவும், பசிபிக் கடற்கரையில் இரண்டாம் இங்கிலாந்தாகத் திகழவும் பிரிட்டிஷ் கொலம்பியாவை உருவாக்க லண்டனில் இருந்த கர்னல் அலுவலகம் மூடியை அனுப்பிவைத்தது. அவர்தான் பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல் லெப்டினென்ட் கவர்னராகவும் தலைமைக் கமிஷனராகவும் இருந்தார்.  இந்தியாவுக்கு ராபர்ட் கிளைவ் என்றால் பி.கொலம்பியாவுக்கு மூடி என்று வைத்துக்கொள்ளலாம். கி.பி 1866 இல் வான்கூவர்  தீவு பி.கொ வின் ஒரு பகுதியாக ஆனது.  கி.பி 1867 இல் நியூ பிரன்ஸ்விக் பகுதியும் நோவா ஸ்கோஷியா பகுதியும் இணைந்து கனடா ஆனது.  கி.பி 1848 முதலே கனடாவில் அரசு இருந்தாலும், பிரிட்டிஷ்தான் அதன் வெளியுறவுக் கொள்கைகளையும் பாதுகாப்புக் கொள்கைகளையும் வடிவமைத்து வந்தது. முதல் உலகப்போர் வரையிலும் இந்த நிலைதான்.  கி.பி 1931 டிசம்பர் 11 ஆம் நாள் வெஸ்ட்மினிஸ்டர் ஒப்பந்தம் மூலம்தான் கனடாவுக்கு விடுதலை கிடைத்தது.

இப்போது கனடாவின் அரசியலமைப்பு ‘அரசமைப்பு முடியாட்சி எனப்படும்.  இரண்டாம் எலிசபெத் அரசியார் நாட்டின் தலைவர் ஆவார். அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குவது பிரதமர். பிரதமரின் பெயர் ஜேம்ஸ் துரூடு. கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட்.   கவர்னர் ஜெனரல்தான் முடியரசியின் பிரதிநிதி.. இவர் கனடாவின் பிரதமரால் நியமிக்கப் படுபவர்.  நாடாளுமன்றத்தில் செனட் உறுப்பினர்களும் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் உறுப்பினர்களும்இருப்பார்கள்.       பூர்வகுடிகள், பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் மற்றும் புதிதாகக் குடியேறியவர்கள் என அனைவரின் பழக்க வழக்கங்களும் சேர்ந்ததுதான் கனடாவின் தற்போதைய கலாச்சாரம்.  மொழி ரீதியாக, புவியியல் ரீதியாக, பொருளாதாரக் கொள்கைகள் ரீதியாக அதன் அண்டை நாடான அமெரிக்காவின் பாதிப்பு உண்டு.  எனினும் கனடா அதன் தனித்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இன்று கனடா பத்துத் துணைத் தேசிய அரசுகள் கொண்ட பிராந்தியங்களை உள்ளடக்கிய நாடாக இருக்கிறது.  ஒரு நாட்டின் பின்னால் இருக்கும் வலிகள் கொஞ்ச நஞ்சமல்ல.  பல கழுகுகளிடமிருந்து தனது குஞ்சுகளைக் காக்கத் தாய்க்கோழி படாத பாடு படவேண்டியிருக்கிறது.  புழு பூச்சிகளைப்போல உயிர்களைப் பலிகொடுக்க வேண்டியிருக்கிறது.  கனடா என்பது இன்றைக்குக் கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சிகளுக்குப் பின்னால் தீராத துயரங்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.  நகரங்களின் நவீனமயமாக்கலும் உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் பார்வையாளர்களுக்கு ஒரு கலைடாஸ்கோப்பைப் போல வண்ணமயமான காட்சிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.  ஊடுருவிப் பார்ப்பவர்கள் இதன் காட்சிப்பிழைகளைக் கண்முன் நிறுத்த முனைகிறார்கள். தோற்றப் பிழைகளின் தொல் வரலாறுகளைத் தோலுரிக்க நினைக்கிறார்கள். கனடாவில்  பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து அந்த பூமிக்கு சொந்தக்காரர்களான பூர்வகுடிகளின் அழுகையொலிகள் தேய்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன.    2014 இல் கனடா நாட்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யானைப் பசிக்குச் சோளப்பொறி போல வாய்த்திருக்கிறது. உண்மையில் அவர்களின் நிலத்தில் ஒரு பகுதிக்கான உரிமையை உறுதி செய்ததற்காக  கனடாவின் நீதித்துறை பெருமிதம் கொள்ளலாம்.  ஆனால் மிச்ச மீதியுள்ளவர்களின் ஒட்டு போடப்பட்ட கனவுகளால் ஒரு வண்ணமயமான வானவில்லை வடிவமைத்துவிட முடியாது.  ஆனாலும் பழங்குடியினரின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் அந்தத் தீர்ப்பு அவர்கள் நம்பிக்கையில் ஒளியேற்றட்டும். கனடா பயணம் நிறைவடைந்தாலும் பயணங்களுக்கு முடிவில்லை.

;