1644 - காற்றழுத்தமானியை 1643இல் உருவாக்கிய இவாஞ்செலிஸ்ட்டா டாரிசெல்லி, அதைப் பற்றி, தன் நண்பரான மைக்கேலேஞ்சலோ ரிக்கி என்ற கத்தோலிக்க மதகுருவுக்குக் கடிதம் எழுதினார். ‘காற்றாலான ஒரு கடலில் மூழ்கிய நிலையில்தான் மனிதர்கள் வசிக்கிறார்கள்’, என்று அவர் குறிப்பிட்டிருந்தார். கலீலியோவுடன் பல்வேறு அறிவியல் கருத்துகளைக் கடிதங்கள்மூலம் பரிமாறிக்கொண்டவரான, சனோவாவின் ஆளுனர் ஜியோவின்னி பாலியானி, உறிஞ்சுகுழல்மூலம், 34 அடிக்குமேல் நீர் உயரவில்லை என்பதற்கு 1930இல் விளக்கம் கேட்டபோது, அது வெற்றிடத்தின் சக்தி என்று கலீலியோ பதிலளித்திருந்தார். கலீலியோவின் மாணவரும், நண்பருமான டாரிசெல்லி, நீரைவிட பாதரசம் 13 மடங்கு எடை அதிகம் என்பதால், அதில் 13இல் ஒரு பங்கு, அதாவது 76 செ.மீ. அளவுக்குத்தான் உயரும் என்று கணக்கிட்டு, ஒரு மீட்டர் நீளமுள்ள, ஒருபுறம் அடைக்கப்பட்ட ஒரு குழாயில் பாதரசம் நிரப்பி, பாதரசமுள்ள மற்றொரு கலனில் கவிழ்த்தபோது, 76 செ.மீ.வரை பாதரசம் இறங்கியது. அதற்கு மேலிருந்த இடம் வெற்றிடமானதன்மூலம், பண்டைய கிரேக்க ஆய்வாளர்கள் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டுவந்த வெற்றிடத்தை, முதன்முறையாக உருவாக்கியவரானார். அது டாரிசெல்லியின் வெற்றிடம் என்றும், அக்குழாய் அமைப்பு டாரிசெல்லியின் குழாய் என்றும் பெயரிடப்பட்டன.
இது வெளியிலுள்ள(நம்மைச் சுற்றியுள்ள) காற்றின் அழுத்தம் என்பதை நிரூபித்ததன்மூலம், அதுவரை காற்றுக்கு எடையே இல்லை என்று நம்பப்பட்டுவந்ததை உடைத்ததுடன், காற்றழுத்தத்தை அளக்கும் கருவியாகவும் ஆனது. இத்தாலிய கணிதவியலாளரான கேஸ்பரோ பெர்ட்டி, இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டு, டாரிசெல்லிக்கு முன்பே ஒரு காற்றழுத்தமானியை உருவாக்கியதாகக் கூறப்பட்டாலும், ஆதாரங்கள் இல்லை. காற்று வீசுவதற்குக் காரணம் காற்றழுத்த வேறுபாடுதான் என்பதையும், அதற்கு வெப்பநிலை காரணம் என்பதையும் கண்டுபிடித்தவரும் டாரிசெல்லிதான். அதன்மூலம், குறுகியகால காலநிலைய மாற்றங்களைக் கண்டறிய தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட காற்றழுத்தமானி, பின்னாளில் மலையேறுதல், வான்பறப்பு முதலானவற்றில் உயரத்தை அளக்கவும் பயன்படத் தொடங்கியது. நீர், பாதரசம், எண்ணெய் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்திய காற்றழுத்தமானிகளுடன், நீர்மமில்லா காற்ற ழுத்தமானிகளும் உருவாக்கப்பட்டன. சில தற்காலத்திய மொபைல் ஃபோன்க ளிலேயே காற்றழுத்தமானி இடம்பெற்றுள்ளது. டாரிசெல்லியால் உருவாக்கப்பட்ட வெற்றிடம் 20ஆம் நூற்றாண்டில் வெள்ளொளிர்வு விளக்குகளுக்கும்(பல்பு), வெற்றிடக்குழாய்களுக்கும் அடிப்படையாக அமைந்து, பின்னாளைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உந்துசக்தியாகியது.
- அறிவுக்கடல்