tamilnadu

img

தொடர்ந்து சேதமடையும் மீன்பிடித் துறைமுக கருங்கல் தடுப்புச்சுவர்.... தரமாக பணி செய்யவில்லை: திமுக குற்றச்சாட்டு...

மயிலாடுதுறை:
தரங்கம்பாடியில் கடந்த 2019ஆம் ஆண்டு ரூ.120 கோடியில் துவங்கப்பட்ட மீன்பிடித் துறைமுக கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தூண்டில் வளைவு கருங்கல் தடுப்புச்சுவர் அவ்வப்போது ஏற்படும் சாதாரண கடல் சீற்றத்தையே தாக்குப்பிடிக்காமல் தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. 

இதனிடையே “நிவர்” புயல் காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கருங்கல் தடுப்புச்சுவரின்  பெரும்பகுதி சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன் வியாழனன்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், ஏற்கனவே ஆம்பன் புயலினால் ஏற்பட்ட கடல் சீற்றத்திலும் கருங்கல் தடுப்புச்சுவர் சேதமடைந்திருக்கிறது. தற்போது நிவர் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் பெரும்பகுதி சேதமடைந்திருக்கிறது. தரமில்லாத பணிகளால்தான் ஒவ்வொரு முறையும் பாதிப்பு ஏற்படுகிறது. உடனடியாக தமிழக அரசும், மீன்வளத்துறையும் துரித நடவடிக்கை எடுத்து பாதிப்புகளை சரிசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து ஏற்படும் சேதம்குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், துறைமுக பணிகள் நிறைவடைவதற்கு முன்பே இது போன்று சேதமடைகிறதென்றால் முழுமையாக நிறைவடைந்த பின்னர் எப்படி இருக்கும்என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பலமுறை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் வைக்கப்பட்ட, அலைத்தடுப்புச் சுவரின் அகலத்தையும், உயரத்தையும் அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை அலட்சிய ப்படுத்துவதாகவும், பெரிய பெரிய பாறைகளை தடுப்புகளாக அமைக்காமல் சின்னஞ்சிறு கற்களை கொட்டுவதால்தான் தொடர்ந்து சேதமடைவதாகவும் கூறுகின்றனர். அனைத்து வசதிகளுடன் கூடிய மீன்பிடி துறைமுகத்தை அமைப்பதாக கூறிவிட்டு தரமில்லாமல் செய்யப்படும் பணியால் ரூ.120 கோடியை கடலில் கரைக்க போகிறதா தமிழக அரசு?

;