மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள நல்லாடைகிராமத்தில் நிவர் மற்றும் புரெவி புயல்கள், மழை காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் செவ்வாயன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். செம்பனார்கோவில் வட்டாரத்தில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் 15814 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அண்மையில் பெய்த கனமழை, புரெவி புயலால் 11645 ஹெக்டேர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய உள்துறை இணை அமைச்சக செயலாளர் அசுடோஷ் தலைமையில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சக இயக்குனர் மனோகரன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக மண்டல அலுவலர் ரணன் ஜெய் சிங், மத்திய நிதித்துறை அமைச்சகம் துணை இயக்குனர் அமித் குமார், மத்திய மின்சார ஆணையம் உதவி இயக்குனர் சுபம் கார்க், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் உதவி ஆணையர் மோதிக், மத்திய மீன்வளத்துறை ஆணையர் டாக்டர் பால் பாண்டியன், மத்திய நீர்வள ஆணையம் இயக்குனர் ஹர்ஷா ஆகியோர் கொண்ட மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட மாதிரி நெற்பயிர்களை பார்வையிட்டனர்.
வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, நாகை வேளாண்மைத் துறை இணை இயக்குனர் கல்யாணசுந்தரம், துணை இயக்குனர் பன்னீர்செல்வம், செம்பனார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ், வேளாண்மை அலுவலர் குமரன்,தரங்கம்பாடி வட்டாட்சியர் கோமதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
விவசாயிகள் அதிருப்தி
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த மத்தியக் குழு விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்காமல் மிக தாமதமாக வந்தவர்கள் சுற்றுலா வந்திருப்பது போல வேளாண்துறை கட்டி வைத்திருந்த பிளக்ஸ் பேனரை பார்த்து விட்டு விவசாயிகளிடம் எதுவும் சொல்லாமல் சென்றது குறித்து ஒரு சில விவசாயிகள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளின் புகைப்படங்கள் மற்றும் அழுகிய பயிர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை 8 பேர் அடங்கிய மத்திய குழுவினர் செவ்வாயன்று இரவு பார்வையிட்டனர். பின்னர் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். அப்பொழுது நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கல்யாணசுந்தரம், துணை இயக்குனர் பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருத்துறைப்பூண்டி
புதன்கிழமை திருத்துறைப்பூண்டி பகுதியில் பாமணி, நுணாகாடு, வடசங்கந்தி உப்பூர், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். அங்கிருந்த அதிகாரிகளிடமும், விவசாயிகளிடமும் பாதிக்கப்பட்ட பயிர்கள் பற்றி கேட்டறிந்தனர். மாவட்ட ஆட்சியர் சாந்தா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.