tamilnadu

மதவெறி, சாதிவெறி சக்திகளை முறியடித்து உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்போம்!

சென்னை, ஏப். 30-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தி வருமாறு:உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மே தின நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.மே தினம் என்பது இந்த உலகம் உழைப்பவருக்கே உரியது என்று ஓங்கி உரைத்த உரிமைத் திருநாளாகும். அமெரிக்காவில் மையம் கொண்ட உலகப் பொருளாதார நெருக்கடி, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடத் துவங்கி பத்தாண்டுகள் கடந்து விட்டது. இந்நிலையில், பெருமளவு மீட்சி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் உலக முதலாளித்துவம், லாபத்தை எப்படியேனும் மேலும் மேலும் குவிக்கும் நோக்கத்துடன் இன்னும் தீவிரமாக உலக உழைப்பாளி மக்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்து விட முனைகிறது. அதை எதிர்த்து அணிதிரளும் உழைப்பாளி மக்களை ஒடுக்குவதற்கும் துண்டாடுவதற்கும் பல்வேறு சதிராட்டங்களை அரங்கேற்றுகிறது.

ஒருபுறம் உழைப்பாளி மக்களின் நலன் காக்கும் சோசலிச அரசுகளான மக்கள் சீனம், கியூபா, வியட்நாம், கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு (வடகொரியா) மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள இடதுசாரி, முற்போக்கு அரசுகள் மீது அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் பல முனைகளில் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கிறது. அந்த முயற்சிகள் மீண்டும் மீண்டும் தோல்வியிலேயே முடிவதை கடந்தாண்டு முழுவதும் பார்த்தோம். உழைக்கும் மக்களின் உறுதிமிக்க எதிர்ப்பு மற்றும் சோசலிச நாடுகளின் சாதுரியமான செயல்பாடுகளால் இது சாத்தியமாகியுள்ளது. மறுபுறம், தீவிரமடைந்து வரும் உலக முதலாளித்துவச் சுரண்டலின் பகுதியாக இந்தியாவில் பகாசுர பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் சுரண்டல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அமைந்துள்ள மோடி அரசு நாட்டின் வளங்கள் அனைத்தையும் இக்கம்பெனிகளுக்கு தடையின்றி தாரை வார்த்து வருகிறது.


இதுமட்டுமன்றி கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன்களுக்காக, பல்லாண்டுகள் உழைப்பாளி மக்கள் போராடிப் பெற்ற சங்கம் வைக்கும் உரிமை உட்பட பல உரிமைகள் தட்டி பறிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் கிராமப்புற மக்கள், விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் வாழவழியின்றி தவிக்கிறார்கள். விவசாய தற்கொலைகள் தொடர்கின்றன. பணமதிப்பு நடவடிக்கைகளால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள், வியாபாரம், கைத்தறி, விசைத்தறி, பின்னலாடைத் தொழில்கள் அனைத்தும் நொறுங்கி விட்டன. வேலையின்மை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. வறுமைக் கொடுமைகள் தீவிரமடைந்துள்ளன.இத்தாக்குதல்களை எதிர்த்து இந்திய தொழிலாளி வர்க்கமும் விவசாய வர்க்கமும் வரலாறு காணாத பிரம்மாண்டமான போராட்டங்களை இந்தக் காலக்கட்டத்தில் நடத்தின.

தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து நடுத்தர வர்க்க ஊழியர் இயக்கங்கள் என ஒட்டுமொத்த இந்திய உழைக்கும் வர்க்கமும் நடத்திய பிரம்மாண்டமான ஜனநாயக எழுச்சியின் உச்சக்கட்டமாக 17-வது மக்களவைத் தேர்தலில் பாசிச பாஜக அரசை வீழ்த்துவதற்கான போராட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் பாஜக அரசுடன் கைகோர்த்துக் கொண்டு எடப்பாடி அரசும், உழைப்பாளி மக்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திக் கொண்டுள்ளது. எட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள், எண்ணெய் வளங்களை காவு கொடுப்பது, உயர் மின்கோபுர திட்டங்கள் என அடுக்கடுக்கான தாக்குதல்களை தொடுத்துக் கொண்டுள்ளது. வறட்சியின் கோரப்பிடியில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி வருகின்றன. பன்னாட்டு கம்பெனிகளில் சங்கம் வைக்கும் உரிமை பறிக்கப்பட்டு தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுகிறார்கள். ஸ்டெர்லைட் தொழிற்சாலை எதிர்ப்பு போராட்டத்தில் 15 பேர் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.இக்கொடுமைகளுக்கு முடிவு கட்டி உழைக்கும் வர்க்கத்தின் இறுதி இலக்கான சோசலிச பொன்னுலகை படைக்கும் பயணத்தில் நவீன தாராளமயமாக்கல் கொள்கையை எதிர்த்து, மதவெறி, சாதிவெறி சக்திகளை முறியடித்து உழைப்பாளி மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுக்க உறுதி ஏற்போம். 

;