tamilnadu

img

விவசாயிகளுக்கு ஆதர விலையை ஒன்றரை மடங்கு உயர்த்திவிட்டதாக பிரதமர் மோடி பேச்சு

தேனி ,ஏப்.13-விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு ஆதாரவிலையை உயர்த்திவிட்டதாக தேனியில் பிரதமர் மோடி பேசியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் அ.தி.மு.ககூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஆண்டிபட்டி அருகே சனிக்கிழமையன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது "நாளை துவங்க இருக்கிற தமிழ்புத்தாண்டிற்கு என் வாழ்த்துக்கள். நாளை அம்பேத்கரின் பிறந்ததினம். அவருக்கு எனது மரியாதைகள்.புதிய இந்தியா பற்றியகனவுகளை நோக்கிச் செல்கிறோம். இந்தியா வரலாற்றில் முக்கியமாக தடம் பதித்துக்கொண்டிருக்கிறது. அதனைஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் என்மீது குறை சொல்கிறார்கள். தமிழகத்தின் எதிரிகள் எல்லாம், வளர்ச்சிக்கு எதிராக ஒன்று கூடியிருக்கிறார்கள்.நமது நாட்டின் பாதுகாப்பு என்று வரும் போது நாம் எப்போதும் சமரசரம் செய்துகொள்வதில்லை. 


காங்கிரஸும், நேர்மையின்மையும் நெருங்கிய நண்பர்கள். தலித் மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எல்லாம் காங்கிரஸ் நீதி வழங்குமா? எம்.ஜி.ஆர் ஆட்சியை கலைத்தவர்கள் இந்த காங்கிரஸார். பல ஆண்டுகளாக இப்பகுதியில் ரயில் இணைப்பிற்காக போராடுகிறீர்கள் என்று எனக்கு தெரியும். விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, அது போன்ற பல பணிகள் விரைவுபடுத்தப்படும். மதுரை ‘செட்டிகுளம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைவுபடுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை மூலமாக இப்பகுதி மக்கள்பயனடைவார்கள். பலஆண்டுகளாக போராடிக்கொண்டிருந்த விவசாயிகள், தங்களது விளைபொருள்களின் ஆதார விலையைஒன்றரை மடங்கு அதிகரிக்க கோரிக்கை வைத்தார். அதனை தற்போது அதிகரித்திருக்கிறோம். கங்கையை போல வைகையையும் தூய்மைப் படுத்துவோம். சுந்தரமகாலிங்க மலை மற்றும் ஐயப்பன் கோவிலுக்கு எளிமையாக, விரைவாக செல்ல வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர முனைப்போடு இருக்கிறது இந்த அரசு. தோல்வி மனப்பான்மையில் எதிரணியினர் உள்ளனர்.நீர் கிடைக்கவில்லை என முதலைக்கண்ணீர் வடிப்பவர் யார் என்று தெரியும் .தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலம்நீர்ப்பாசன வசதி பெற்றுள்ளது. மாறாக நம்மிடம்ஓட்டுக்களை பெற்றுக்கொண்டு தண்ணீர் தர மறுக்கும் சக்தி எது? சுருளி அருவி மூலம் கிடைக்கும் தண்ணீரை தடுப்பது யார் என்று தெரியும்” என்றார் . 


இந்த பிரச்சாரக் கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,மத்திய அமைச்சரும் கன்னியாகுமரி பா.ஜ.க வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாமக தலைவர் ஜி. கே .மணி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.  (ந.நி.)


தேனியில் விவசாயிகள் அதிர்ச்சி


காலியான சேர்கள்


பிரதமர் பேசும் போது கடும் வெயில் மண்டையை பிளந்தது. இதனால் மக்கள் வெளியேறினர். இதனால் சேர்கள் காலியாக கிடந்தன 


வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், பாஜகவின் தொண்டராகவே மாறி பாரத் மாதாகீ ஜெ என முழக்கமிட்டுக்கொண்டே இருந்தார். 


கூட்டணி கட்சித்தலைவர்கள் ஜி கே .மணி, பிரேமலதா, நடிகர் சரத்குமார், ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் பேச அனுமதிக்கப்படவில்லை .


வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் தமிழகம் முழுவதும் 2000 க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் வரவழைக்கப்பட்டு பொதுக்கூட்டத்திற்கு மக்கள் அழைத்துவரப்பட்டனர்.


எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை அருகே மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


சுருளி அருவியை தடுத்தவர் யார் என்று தெரியும் என்று பிரதமர் பேசும் போது குறிப்பிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.சுருளி அருவிக்கு வரும் தண்ணீரை தடுத்து


அணைக்கட்டி தமிழக மின்துறை மின்சாரம் தான் எடுக்கிறது என்றனர். யாரோ எழுதிக்கொடுத்ததை வாசித்துவிட்டு போறார் பாவம், அவர் என்ன செய்வார் என்று மோடியைப் பார்த்து பரிதாபப்பட்டுக் கொண்டனர் மக்கள்.

;