tamilnadu

img

ஏப்ரலில் பணி நிறைவடைந்துவிட்டால் மே மாதத்தில் தேனி-மதுரை ரயில் போக்குவரத்தை துவக்குக... சு.வெங்கடேசன் எம்.பி., வலியுறுத்தல்....

தேனி:
போடி -மதுரை அகல ரயில் பாதை பணிகளை ஆய்வு செய்ய  மதுரை மக்களவை உறுப்பினரும், ரயில்வே நிலைக்குழு உறுப்பினருமான சு.வெங்கடேசன் வெள்ளிக் கிழமையன்று தேனி மாவட்டத்திற்கு வந்தார். உசிலம்பட்டி கணவாய், ஆண்டிபட்டி  ரயில் நிலையம், தேனி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் மதுரை ரயில்வே துணை தலைமை பொறியாளர் வி.சூரியமூர்த்தி, மூத்த பணிப்பிரிவு பொறியாளர் வி.பாஸ்கரன் உள்ளிட்ட பொறியாளர்கள் மற்றும் போடி -மதுரை, திண்டுக்கல் -லோயர்கேம்ப் அகல ரயில் பாதை திட்ட அமலாக்கக்குழு உறுப்பினரும் பெரியகுளம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான ஏ.லாசர்,சங்க நிர்வாகிகள் கே.ராஜப்பன், எல்.ஆர்.சங்கரசுப்பு, பா.ராமமூர்த்தி, சி.முனீஸ்வரன், இ.நாகராஜன், பி.கே.ஆர் .விஜயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன்  ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

 அகல ரயில் பாதை பணிகளை பார்வை யிட்ட பின்னர் தேனியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி.கூறியதாவது:ஏறக்குறைய 10 வருடங்களாக மதுரை - தேனி - போடி வழித்தடத்தில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்பணிகள் சம்பந்தமாக மக்கள் பிரதிநிதிகள் என்கிற முறையில் நாங்கள் தலையிட்டு குறிப்பிடத்தகுந்த பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.குறிப்பாக மதுரை-போடி அகலப்பாதைக்கான நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக ரயில்வே துறை அமைச்சரையும் அதிகாரிகளையும் சந்தித்த பொழுது இந்தியா முழுவதும் 4 ஆயிரம்  கிலோமீட்டருக்கான பழைய ரயில் தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட வேண்டியிருக்கிறது. அதனால் அந்த பணிகளுக்கான நிதியையே ரயில்வே துறையால் ஒதுக்க முடியாத நிலையில்  புதிய ரயில் வழித்தடத்திற்கான நிதியை ஒதுக்க மாட்டோம் என்று பதிலளித்தார்கள்.எனவே ரயில்வே ஆலோசனைக்குழு கூட்டத்திலும், தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் திருச்சியில் நடத்தியகூட்டத்திலும் தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் அடிப்படையில் தற்போது பல்வேறு வேலைகள் நடைபெற்று வருகிறது. 

குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி அவர்கள் துவக்கி வைத்த இராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையிலான ரயில் திட்டத்திற்கு சென்ற வருடம் வெறும் 2.7 கோடி ரூபாய் தான் ஒதுக்கியுள்ளார்கள். ஆனால் மதுரை - போடி இந்த அகலப்பாதைக்கான ரயில்திட்டத்திற்கு  கடந்த ஆண்டு 50 கோடி ரூபாயும் தற்போதும் குறிப்பிட்ட அளவிலானநிதியை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்மற்றும் ரயில்வே துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் என்கிற முறையில் தொடர்ச்சி யாக வலியுறுத்தி பெற்றுத்தந்துள்ளோம்.கடந்த மாதம் மதுரை-ஆண்டிப்பட்டி வரையிலான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. மதுரை - போடி அகல ரயில் பாதை ஆய்வு குறித்து ரயில்வேதுறை அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகு நேற்றைய தினம் தென்னக இரயில்வே மண்டலத்தின் பொது மேலாளர் ஒரு விரிவான கடிதத்தை எனக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டத்தில் மதுரை-ஆண்டிப்பட்டி வரையிலான பணிகள் முடிந்து சோதனை ஓட்டமும் முடிந்தது. ஆண்டிப்பட்டி முதல் தேனி வரையிலான பணிகள் ஏப்ரல் மாதத்திலும் தேனி முதல் போடி வரையிலான அகல ரயில் பாதை பணிகள் செப்டம்பர் மாதத்திலும் நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அதற்கான நிதியும் கொரோனா கால சிறப்பு நிதிகளிலே எங்களுக்கு வந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.  அடுத்து வரவிருக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தால்தான் தேனி - போடிக்கு இடையிலான அகல ரயில்பாதை பணிகள் துவங்கும் என்கிற நிலை தற்போது இல்லை. எனவே முதலாவதாக அப்பகுதிகளுக்கு  இடையிலான ரயில் பாதை பணிகளை உடனடியாக விரைவுபடுத்த வேண்டும்.இரண்டாவது மிக முக்கியமாக ஏப்ரல் மாதத்தில் தேனி வரையிலான ரயில்பாதை பணிகள் நிறைவடைந்துவிட்டால் மே மாதத்தில் இருந்து ரயில் போக்குவரத்து உடனடியாக இயக்கப்பட வேண்டும். தேனியில் இருந்து மதுரைக்கு பயணிகள் ரயில் இயக்குவதற்காக மட்டுமல்ல; சென்னையை இணைக்கிற இணைப்பு ரயில்களை தேனியில் இருந்து மே மாதம் முதல் இயக்க வேண்டும். ஏற்கனவே மதுரையில் இருந்து சென்னைக்கு இயங்குகிற ஏதேனும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியினை தேனி வரை விரிவுபடுத்த வேண்டும்.அதேப்போல தேனி முதல் நாகர்கோவில் வரையிலான பயணிகள் ரயில் வண்டியும் மே மாதத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  ஏ.லாசர், மாவட்டச் செயலாளர்  டி.வெங்கடேசன், மூத்த தலைவர் கே.ராஜப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;