tamilnadu

img

‘கொலைகார ஆட்சியை வீட்டுக்கு அனுப்புங்கள்’ தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தூத்துக்குடி, ஏப். 10-

13 பேரை சுட்டுக் கொன்ற கொலைகார ஆட்சியை வீட்டுக்கு அனுப்புங் கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி, விளாத்திகுளம் சட்டப் பேரவைவேட்பாளர் ஜெயக்குமார் ஆகிய இருவரையும் ஆதரித்து தூத்துக்குடி புதுக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்தப் பொதுக் கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட திமுக மாவட்டச்செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் கீதா ஜீவன் முன்னிலை வகித்தார்.தமிழ்நாட்டில் தனது கட்சிக்கு துரோகம் செய்யும் எடப்பாடி ஆட்சிக்கும் மத்தியிலே ஆட்சி செய்யக்கூடிய மோடியின் ஆட்சிக்கும்விடை கொடுக்கும் நாள் மே 23. இந்தமே 23-இல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது உறுதி என்று கனிமொழி கூறினார். இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:நாடாளுமன்றத் தேர்தலுக்கு நடக்கும் 40 நாடாளுமன்ற, (பாண்டிச்சேரி உட்பட) தூத்துக்குடி நாடாளு மன்ற வேட்பாளர் கனிமொழியும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் விளாத்திகுளத்தில் போட்டியிடும் ஜெயக்குமாரும் வெற்றி பெற்றிட வேண்டும் என்று உங்களை நாடி தேடி ஓடி உங்களிடம் வாக்கு சேகரிக்கவந்திருக்கிறேன்.


நாங்கள் வாக்குகள் மட்டும் சேகரிக்க வருவோம் என்று நினைக்க வேண்டாம். மக்கள் பணி யாற்றிட என்றும் திமுக உழைத்து கொண்டே இருக்கும்.இந்த மண் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனாரின் மண். வீரம் விளைந்த இந்த மண் என்று பெருமிதம் கொள்கிறேன்.சமூகப் போராளி கனிமொழி ஒரு சிறந்த பத்திரிகையாளர். சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர். அவர்தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக கிடைத்தது சிறப்பு. அவர் உங்களுக்கு ஸ்டைகர் ஆக கிடைத்துள்ளார் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்த கேடுகெட்ட ஆட்சியை ஒரு மாதம் அல்ல, ஒரு நொடி போதும் வீட்டுக்கு அனுப்ப.ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை காக்கா குருவிகள் போல் சுட்டுக்கொலை செய்த அதிமுக மற்றும் பிஜேபி கொலைகார அரசை, வரும் பதினெட்டாம் தேதி நீங்கள் செலுத்தும்வாக்கின் மூலம் வீட்டுக்கு அனுப்பி வெற்றியை பெறுவதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்துப்பாக்கிச் சூட்டில் பலியான போது எதிர்க்கட்சியாக இருந்த நான் ஓடோடி வந்து இந்த மக்களை பார்த்தேன். ஆனால் இந்த எடப்பாடி அரசு அதற்கு கூட வரவில்லை. அது போகட்டும். ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.இங்கே போட்டியிடும் பாரதிய ஜனதாவின் வேட்பாளர் தமிழிசை, விமானத்தில் தூத்துக்குடி வரும் பொழுது தனக்கு பின் இருந்த மாணவி சோபியா பாசிச பாஜக ஒழிக என்று கூறியதைக் கேட்டமுடியாத தமிழிசை, அந்தப் பெண்ணை கொச்சைப்படுத்தி- கேவலப்படுத்தி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி கைது செய்யக் காரணமாக இருந்தவர் இந்த தமிழிசை.இப்பொழுது ஸ்டாலின் நான் சொல்கிறேன் பாசிச மோடி பாஜக ஒழிக என்று சொல்லுகிறேன் கைது செய்ய தயாரா?தமிழிசை அவர்களே உங்களுக்குதூத்துக்குடி தான் கிடைத்ததா.


உங்கள் கட்சியினரே உங்களை பழிவாங்குவதற்காக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது போல் தெரிகிறது. அவர் வெற்றி பெற மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவருக்காக நான் இப்பொழுதே என்னுடைய அனுதாபத்தை தெரி வித்துக் கொள்கிறேன்.பிற்படுத்தப்பட்ட, தலித்துகள், சிறுபான்மையின, பழங்குடியின மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர் கலைஞர். ஆனால் இப்போது நடக்கும் ஆட்சியோ உதவாக்கரை எடப்பாடி ஆட்சி. மோடி உத்தரப்பிரதேசம், குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவர். இப்பொழுது தமிழகத்திலும் அந்த நிலைமையை பயன்படுத்த இந்த ஆட்சி துணை போகிறது.ஜூன் 3-இல் கலைஞர் பிறந்த நாளில் இந்தப் பாசிச மோடியின் ஆட்சியும் உதவாக்கரை எடப்பாடியின் ஆட்சியும் வீட்டுக்கு அனுப்பப்படும். இதே மேடையில் கனிமொழி வெற்றி விழா நடத்தப்படும் என்று ஸ்டாலின் கூறினார்.இந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், சிபிஐமாவட்ட செயலாளர் ஏ.அழகுமுத்து பாண்டியன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செய லாளர் கதிரேசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காஜா மீரான், ஐ.ஜே.கே சார்பில் பாலமுருகன், மனித நேய மக்கள் கட்சியின் போத்திராஜ், சமத்துவ மக்கள் கழகத்தின் அற்புதராஜ், பார்வர்டு பிளாக் ஆர்.முருகேசபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் முத்துவேல் ராசா, ஆதித் தமிழர் பேரவையின் செண்பகராஜ், ஆதித் தமிழர் கட்சி ஏ.ஜெ.ரமேஷ் ஆகியோர் உட்பட பலர்பங்கேற்றனர்.

;