tamilnadu

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக அரசியல் அலை இரா.முத்தரசன் பேச்சு

தற்போதைய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக எழுச்சி அலை வீசுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார். திருவாரூரில் திங்கட்கிழமையன்று நடைபெற்ற நாகை நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும்

பேசியதாவது, தற்போதைய தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவான அரசியல்அலை வீசிக் கொண்டிருப்பது நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மோடி தலைமையிலான மத்திய அரசு மற்றும் மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான தமிழக அரசு இவற்றின் செயல்பாடுகள் குறிப்பாக மோடி அரசின் சித்தாந்த ரீதியிலான மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்தும் மக்கள் பேசி வருகிறார்கள். இது கடந்த தேர்தல் காலங்களை விட முற்றிலும் வேறுபட்டது. அரசியல் உணர்வு பெற்று மோடி அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளதால் தற்போது அரசியல் அலை வேகமாக வீசிக் கொண்டிருக்கிறது. இதன் வெளிப்பாடு தான் நமது கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தன்னெழுச்சி யாக பல்லாயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்று வருகிறார்கள். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. இது நமது கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றிக்கு சாட்சியாக அமைந்து வருகிறது. அதே நேரத்தில் நாம் நம்முடைய பணியை மக்களிடத்தில் விரிவாக கொண்டு செல்ல வேண்டும். 


நமது கூட்டணி என்பது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொள்கையின் அடிப்படையில் தோழமையோடு பயணித்து தற்போது கூட்டணியாக உருப்பெற்றுள்ளது. எனவே இது கொள்கை சார்ந்த கூட்டணி. மக்கள் மீது அக்கறை கொண்டு பணியாற்றும் கூட்டணி. எதிர்அணியைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் ஏற்பட்டுள்ள கொள்கையற்ற சுயநலக் கூட்டணி. இந்த வேறுபாட்டை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள். தேர்தலில் நல்ல தீர்பை வழங்கவும் காத்திருக்கிறார்கள். நாகை நாடாளுமன்ற தொகுதியை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களில் நாம் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். காவிரி உரிமைக்காக நாம் ஒன்றுபட்டு நடத்திய 48 மணி நேர ரயில் மறியல் போராட்டம் குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி 3 நாட்கள் நடைபெற்றது. 3 நாட்களுக்கு பின்னரே சிறைபிடிக்கப்பட்ட ரயில்கள் மீட்கப்பட்டன. போக்குவரத்து சீரானது. அதே போல மீத்தேன் திட்ட எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு என பல்வேறு போராட்டங்களை இணைந்து நடத்தி இருக்கிறோம். இந்த

பெருமையோடு நாம் மக்களைச் சந்திக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள்.  இவ்வாறு இரா.முத்தரசன் பேசினார்.