tamilnadu

img

அராஜக அதிமுக ; அசராத மக்கள்... ஒற்றுமை செயல்பாட்டால் வெற்றி பெற்றார் உதுமான்

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ள முதன்மையான வெற்றியாக வார்டு எண் நான்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜே.முகமது உதுமான் பெற்ற வெற்றி பார்க்கப்படுகிறது. நன்னிலம் வட்டத்தைச் சேர்ந்த இந்த மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட அகரதிருமாளம், கொல்லாபுரம், மேனாங்குடி, கொல்லுமாங்குடி, பாவட்டக்குடி, நெடுங்குளம், உதய வேதாந்தபுரம், கூத்துனூர், போலக்குடி, பில்லூர், திருமைச்சூர், கீரனூர், குமாரமங்கலம், காளியாகுடி, வேலங்குடி, திருக்கொட்டாரம், சிறுபுலியூர், பாண்டாரவாடை, கொத்தூர், குருங்குளம் ஆகிய 20 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகள் அனைத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை பரப்பி மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தோடு செயல்பட்டு வருகிறது.

அத்துடன் திமுக கூட்டணிக் கட்சிகளும் உணர்வுப்பூர்வமாக சிறப்பாக தேர்தல் பணியாற்றியதால் இந்த வெற்றி சாத்தியமானது. பதிவான 29,974 வாக்குகளில் சிபிஎம் வேட்பாளர் ஜே.முகமது உதுமான் 12,277 வாக்குகளைப் பெற்று சிறப்பான வெற்றியைப் பெற்றார். இதே தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நட்பு ரீதியிலான போட்டியில் இருந்து 3,167 வாக்குகளை பெற்றுள்ளார். இது தவிர்க்கப்பட்டிருந்தால் பெரும் வாக்கு வித்தியாசத்தில் உதுமான் வெற்றி பெற்றிருப்பார். ஜே.முகமது உதுமான் 36 வயது நிரம்பிய இளைஞர். எம்.எஸ்.சி (வேதியியல்) பட்டதாரி. சிங்கப்பூரில் வணிகம் செய்து வந்த இவர் சொந்த மண்ணிற்கு திரும்பி மக்கள் பணியாற்ற விரும்பி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 20 ஆண்டுகாலமாக கட்சியில் பணியாற்றி வருகிறார். வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளராக, தமுஎகசவின் வட்ட செயலாளராக, பில்லூர் கூட்டுறவு வேளாண் வங்கியின் இயக்குநராக பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி வருகிறார். பொது வாழ்வில் தொண்டுள்ளத்தோடு மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். இதுபோன்ற காரணங்களால் இவரை வேட்பாளராக அறிவித்த நாள் முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது உள்ளாட்சி தேர்தல் பிரச்சார பணியை கொல்லுமாங்குடியில் இருந்து துவங்கி உதுமானுக்கு வாக்கு சேகரித்தார். திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி.கே.கலைவாணன்., எம்.எல்.ஏ., சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன் உள்ளிட்ட பலரும் அயராது பணியாற்றினர். தேர்தல் நெருங்க நெருங்க சிபிஎம் வேட்பாளருக்கான ஆதரவு பெருகியது. மக்கள் ஆரத்தழுவி வரவேற்றனர். குறிப்பாக இந்த பகுதியில் பெரும்பாலாக வசிக்கக்கூடிய இஸ்லாமிய சமுதாய மக்கள் எங்களின் பாதுகாவலர்கள் நீங்கள் தான் என்று தங்களின் நல்ஆதரவை வழங்கினர். உழைக்கும் மக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே தங்களின் விடியலுக்கான கட்சி என்று கூறியதுடன் எங்களின் சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் என்று பெருமைப்பட கூறினர். குறிப்பாக இப்பகுதி இளைஞர், இளம்பெண்கள்  சமூகவலைதளங்கள் மூலமாகவும் வேட்பாளர் முகமது உதுமானுக்கு ஆதரவைத் திரட்டினர்.மேலும் மத்தியில் ஆளக்கூடிய மோடி, அமித்ஷா கூட்டணி அமல்படுத்த துடிக்கும் குடியுரிமைச் சட்டம் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய வெறுப்பும் அச்சமும் வெற்றியை உறுதிப்படுத்த மேலும் ஒரு காரணியாக அமைந்தது. மேலும் அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கமும் கட்சிக்கு மரியாதையை அதிகப்படுத்தியது.

தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜின் சட்டமன்ற தொகுதி என்பதால் சிபிஎம் வேட்பாளரை எளிதில் வென்று விடலாம் என்ற எண்ணத்துடனும் அரசு எந்திரம் துணை இருக்கிறது என்ற கர்வத்துடனும் ஆரம்பம் முதலே அராஜகமாகவும் சட்டவிரோத செயல்பாடுகளோடும் இந்த தேர்தலை அதிமுகவினர் அணுகினர். அமைச்சரின் ஆதவாளர் என்று கூறிக்கொண்டு தேர்தல் நடைமுறைகள் ஒவ்வொன்றிலும் தலையிட்டு இந்த வெற்றியை தட்டிப்பறிக்க எண்ணினர். ஆனால் ஒற்றுமையோடும், விழிப்புணர்வோடும் தேர்தல் பணியாற்றியதால் மட்டுமின்றி அரசியல் தெளிவோடு ஆளுங்கட்சியின் அராஜகத்திற்கு அசராமல் மக்கள் வாக்களித்ததால் இந்த வெற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்துள்ளது.வாக்கு எண்ணிக்கையன்று காலை முதலே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத ஆளும் கட்சியினர் பலரும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் என்று கூறிக்கொண்டு அதிகாரிகளின் துணையோடு ஆக்கிரமித்திருந்தனர். எப்படியாவது அமைச்சர் தொகுதியில் தங்கள் கட்சி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற வெறித்தனத்தோடு தில்லுமுல்லு செயல்களில் ஈடுபட்டனர். உச்சகட்டமாக வாக்கு எண்ணிக்கை நாளன்று நள்ளிரவு கடந்திருந்த நிலையில் திமுக கூட்டணிக் கட்சியினர் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டனர். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொண்டு வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு மிகுந்த சாதுரியத்தோடு நிலைமையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்கொண்டனர். 

வாக்கு எண்ணிகையிலும், வேட்பாளர் வெற்றி அறிவிப்பிலும் குளறுபடியை ஏற்படுத்தி அராஜக முறையில் வெற்றியை தட்டிப் பறிக்க முனைந்தபோது மாவட்டத்தின் தேர்தல் பார்வையாளராக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சிபிஎம் வேட்பாளர் ஜே.முகவது உதுமான் 150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். உச்சக்கட்ட பரபரப்பிற்கு இடையில் வெற்றிச் சான்றிதழை வழங்க முற்பட்டபோது அதிமுகவினர் பாய்ந்து சென்று சான்றிதழை கிழிக்க முற்பட்ட அராஜகமும் நடைபெற்றது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட தேர்தல் அதிகாரிகள் ஜே.முகமது உதுமானை காவல்துறையினரின் பாதுகாப்போடு அனுப்பி வைத்தனர்.வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே கூடியிருந்த திரளான ஊழியர்கள் அதிகாலை 3 மணியளவில் விண் அதிர வெற்றி முழக்கங்களை எழுப்பி அதிமுகவினரை அதிர வைத்தனர். ஒருதிரைப்படத்தின் உட்சபட்ச காட்சி போல நடந்து முடிந்தது சிபிஎம் வேட்பாளரின் வெற்றி அறிவிப்பு. 
இந்த வெற்றி குறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் டி.வீரபாண்டியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜே.உதுமான் ஆகியோர் தெரிவிக்கையில், மக்களுக்கு ஏராளமான கோரிக்கைகள் உள்ளன. நீண்ட காலமாக உள்ளாட்சி  அமைப்புகள் இல்லாததால் பிரச்சனைகளும் மலைபோல் தேங்கியுள்ளன. ஏற்கனவே மக்களோடு மக்களாக பணியாற்றிக் கொண்டிருக்கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் கருத்தறிந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு அனைத்து மட்டங்களிலும் அயராது தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்தனர். 

;