tamilnadu

img

தொழிலாளர் விரோத மோடி ஆட்சியை தோற்கடிப்பீர் திருப்பூர் பனியன் தொழிற்சங்கங்கள் கூட்டறிக்கை

தொழிலாளர்களின் சட்ட உரிமைகளைப் பறித்து, பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியைத் தோற்கடிக்க மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்கும்படி திருப்பூர் அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.திருப்பூர் அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் செவ்வாயன்று பார்க் 

ரோடு ஐஎன்டியுசி அலுவலகத்தில் நடைபெற்றது. ஐஎன்டியுசி பொதுச் செயலாளர் பி.கே.என்.தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் க.ராமகிருஷ்ணன், ஜி.பாலசுப்பிரமணியம், பூபதி 

(எல்பிஎப்), ஜி.சம்பத், ஈஸ்வரமூர்த்தி (சிஐடியு), என்.சேகர், கே.எம்.இசாக், செந்தில்குமார், குமரேசன் (ஏஐடியுசி), சிவசாமி, பெருமாள் (ஐஎன்டியுசி), மனோகரன், பெருமாள், வடிவேல் (எம்எல்எப்), முத்துச்சாமி, முருகன் (எச்எம்எஸ்) ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து சுமார் 65 ஆண்டுகளாக நீடித்துவந்த, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, ஓவர்டைம் சட்டம், பிஎப் சட்டம் உள்பட தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள், கடந்த ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால் நிரந்தரத்தன்மை, சமூகப் பாதுகாப்பு கைவிடப்பட்டு, சட்ட உரிமைகள் இல்லாத ஒப்பந்த, தினக்கூலி, கேஷூவல் தொழிலாளர்களாக மாற்றப்படும் நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


இத்துடன் மோடியின் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் லட்சக்கணக்கான பனியன் தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் வேலை இழப்பு, வருமானம் இழப்பையும் பல துன்பங்களையும் அனுபவித்தனர். அத்துடன் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில்கள் அழிவைச் சந்தித்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு வேலை இழந்து வறுமையின் பிடிக்குள் சிக்கினர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனை திட்டம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்து மருத்துவமனை கட்டுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, வழக்கு இருப்பது தெரிந்தே, தேர்தல் நேரத்தில் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, பிரதமர் மோடி மலிவான அரசியல் விளம்பரம் தேடும் கண்துடைப்பு நாடகத்தை நடத்தியுள்ளார். எனவே திருப்பூரைப் பாதுகாப்பதற்கும், பனியன் தொழிலாளர் வாழ்வை மீட்பதற்கும் மோடி ஆட்சியை தோற்கடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதற்கேற்ப மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். திருப்பூர் தொகுதியில் கே.சுப்பராயனுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும், கோவை தொகுதியில் பி.ஆர்.நடராஜனுக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திலும், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்திலும் தொழிலாளர்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி திருப்பூரின் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.