வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

காவிக்கொடி ஏந்திய பாரதமாதா படத்துடன் தேசியக் கொடியேற்றி அவமதித்த பாஜக ஊராட்சி மன்றத் தலைவர்....

அவிநாசி:
அவிநாசி அருகே குடியரசு தினத்தன்று தியாகிகள் படங்களை வைக்காமல் காவிக்கொடி ஏந்திய பாரத மாதா படத்தை வைத்து வணங்கிய பாஜக ஊராட்சி மன்ற தலைவருக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 

நாடு முழுவதும் ஜனவரி 26 செவ்வாயன்று குடியரசு தின விழா  கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூவர்ண தேசிய கொடியேற்றி, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கங்கள் செலுத்தப்பட்டன. 

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில்  ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி பிரியா தேசியக்கொடியை  ஏற்றினார். இவர்  பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.கொடியேற்றிய பின்னர் கொடிக் கம்பத்தின் கீழ் பாரத மாதா காவி கொடியுடன் உள்ள படத்தை வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இச்செயலுக்கு அவ்வூராட்சியைச் சேர்ந்த மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்தச் செயலானது தேசிய கொடியினை அவமதிப்பது மட்டுமின்றி,  மதச்சார்பின்மைக்கு எதிரான செயலாகவும் இருப்பதால் ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி பிரியா மீதுவழக்குப் பதிந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்புகார்கள் எழத்துவங்கியுள்ளன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில்,ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி பிரியாவின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தேசியக்கொடியை அவமதித்த அவர் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

;