tamilnadu

img

பாஜக-ஆர்எஸ்எஸ் உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் து.ராஜா குற்றச்சாட்டு

திருப்பூர், ஏப்.15 –மோடியின் 5 ஆண்டு கால ஆட்சி ஒரு மோசடி ஆட்சி, பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவில் உள்நாட்டுக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் செயலாளர் து.ராஜா குற்றம் சாட்டினார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருப்பூர் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து ராயபுரத்தில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிபிஐ தேசியச் செயலாளர் து.ராஜா பேசியதாவது: ஏப்.14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள். அவர் உருவாக்கிய அரசியல் சட்டம் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி இந்த தேர்தலில் முன்வந்துள்ளது. அரசியல் சட்டத்தின் முகப்புப் பகுதியில், “இந்திய மக்களாகிய நாம்” என்றுதான் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் இந்துக்களாகிய நாம் என்றோ, இஸ்லாமியர்களாகிய நாம் என்றோ.. அல்லது தனித்த அடையாளங்கள் அடிப்படையில் இந்திய மக்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. இந்தியாவில் தமிழகம், பஞ்சாப் என பல மாநிலங்கள் வேறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்டிருக்கும் நாடு. இந்த நாட்டின் ஒற்றுமை, முன்னேற்றத்துக்கு அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்.நாட்டின் சுதந்திரத்திற்கு தற்போது பாஜக மூலமாக அச்சுறுத்தல் வந்துள்ளது.


பாஜக ஒரு தீய சக்தி. இதை அகற்றி இந்தியாவை நாம் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பாஜக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கருவி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாஜக தேச விரோத அரசியலை கொள்கையைப் பரப்பி வருகிறது. ஆர்எஸ்எஸ் என்ன நினைக்கிறதோ அதையே பாஜக செயல்படுத்த நினைக்கிறது.இந்தியா பன்முக கலாசாரம் கொண்ட நாடு. அதன் காரணமாக அமையும் அரசு, மதம் சார்ந்து அமையக் கூடாது. அப்படி அமைந்தால் அதை விட பேரிடர் இருக்க முடியாது. இந்தியா உடைந்தே போகும். இந்தியா அழிவதற்கு நாம் அனுமதிக்க கூடாது. இந்தியாவின் ஜனநாயகம், அரசியலமைப்பு காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு பாஜக ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும்.மோடியின் ஆட்சியில் மக்களை பிளவுபடுத்தும் அமைப்புகள் வளர்ச்சி பெற்றுள்ளன. இது தொடர்ந்தால் மதவெறி இந்தியாவை கபளீகரம் செய்யும். இது தடுக்கப்பட வேண்டும். மக்கள் நலன் குறித்து சிந்திக்கும் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும். அதற்கு மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும்.எடப்பாடி ஆட்சியில் தமிழகம் நாசமாகிக் கொண்டிருக்கிறது.


தமிழகத்தின் நலன்கள் காப்பாற்றப்படாமல், உரிமைகள் பறிபோய்க்கொண்டிருக்கிறது. நீட் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார். இதற்கு எடப்பாடி அரசு என்ன பதில் சொல்லப் போகிறது. எடப்பாடி அரசு பல காரணங்களால் மத்திய அரசிடம் மண்டியிட்டுக் கிடக்கிறது. இந்த ஆட்சியை அகற்ற தமிழக மக்களுக்கு ஒரு வாய்ப்பாக இடைத்தேர்தல் வந்துள்ளது. இந்தத் தேர்தலில் சாவு மணி அடிக்கும் தீர்ப்பை வழங்க வேண்டும்.இந்த தேர்தல் கடந்த கால தேர்தல் போல் அல்ல. 2019 ஆம் ஆண்டு இந்தியா, தமிழகத்தின் எதிர்காலம் குறித்த தேர்தல். மோடி 5 ஆண்டு கால ஆட்சியில் அவர் செய்த சாதனைகளைப் பேசத் தயாராக இல்லை. ஆட்சி செயல்பட்ட விதம் பற்றி பேசத் தயாராகவில்லை. தேசப் பாதுகாப்பு, பாகிஸ்தான் என்று தான் பேசிக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு பயத்தை உருவாக்கி மக்களை அச்சுறுத்தி தோல்வியில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். பாஜக - ஆர்எஸ்எஸ் சேர்ந்து கொண்டு இந்தியாவில் உள்நாட்டுக் கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். மோடியின் 5 ஆண்டு கால ஆட்சி மோசடி ஆட்சி என்பதைப் புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றார்.இப்பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், சிபிஐ மாவட்டச் செயலாளர் ரவி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

;