புதுக்கோட்டை: பள்ளி மேலாண்மைக்குழுவில் பங்கேற்கவுள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு வருகின்ற பிப்ரவரி மாதம் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி முகாமில் அறிவியல் இயக்கத்தின் சார்பில் பங்கேற்க உள்ள கருத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை ஞாயிற்றுக்கிழமையன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. பயிற்சிப் பட்டறைக்கு மாநில துணைத்தலைவர் முனைவர் அ.வெ.சுகுமாறன் தலைமை வகித்தார். பேராசிரியர் ந.மணி, பேராசிரியை எஸ்.மோகனா, மாநில செயலாளர்கள் எஸ்.டி.பாலகிருஷ்ணன், எம்.ஸ்டீபன் நாதன், தேனி சுந்தர், அமலராஜன், முனைவர் என்.மாதவன் ஆகியோர் கருத்தாளர்களாகக் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில், மாணவர்களின் தலைமைப் பண்புகளை வளர்த்தெடுத்தல், உளவியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு எளிய முறையில் தீர்வுகாணுதல், கணித புதிர்கள், அறிவியல் அற்புதங்கள், ஆளுமைப் பண்புகள் மேம்படுத்தும் முறைகள் மற்றும் கல்வி உரிமைச் சட்டம் போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பிப்ரவரி 12-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள பரிணாமவியல் அறிஞர் சார்லஸ் டார்வின் பிறந்தநாளையொட்டி டார்வின் முகமூடிகளை மாநில பொதுச்செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் வெளியிட்டார், அதேபோல பிப்ரவரி 28-ம்தேதி கொண்டாடவுள்ள தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி இயற்பியல் அறிஞர் சர்.சி.வி.இராமன் முகமூடிகளை மாநில பொருளாளர் ஜீவானந்தம் வெளியிட்டார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் லெ.பிரபாகரன், அ.மணவாளன், மாவட்டத் தலைவர் க.சதாசிவம் உள்ளிட்ட நிர்வாகிகளும் புதுக்கோட்டையின் மாவட்ட கருத்தாளர்களும் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் வரவேற்றார், நிறைவாக மாவட்ட துணைத்தலைவர் ம.வீரமுத்து நன்றி கூறினார்.