tamilnadu

கொள்ளிடம் பகுதியில் கடைகளில் கொள்ளை

கொள்ளிடம் பகுதியில் கடைகளில் கொள்ளை

சீர்காழி, ஜூன் 14- கொள்ளிடத்தில் இரண்டு கடைகளில் நள்ளிரவில் பூட்டை உடைத்து பணத்தை திருடியும், மேலும் இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியிலும் ஈடுபட்ட கொள்ளையர்களை காவலர்கள் தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் ரயில்நிலையம் அருகே மாங்கணாம்பட்டு கிராமம் மெயின்ரோட்டில், பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருபவர் முத்துகிருஷ்ணன்(58). இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் காலை வந்து பார்த்த போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கல்லாபெட்டியில் இருந்த ரூ7 ஆயிரம் கொள்ளை போனது. மேலும் அருகில் இருந்த முன்னாள் ஊராட்சி தலைவர் நாகராஜன் என்பவருக்குச் சொந்தமான அரிசி மண்டி கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்திருப்பதும், இக்கடையின் எதிரே குருமூர்த்தி(49) என்பவரின் மளிகைக்கடை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது காவலர்கள் விசாரணையில் தெரிந்தது.  இதே போல் கொள்ளிடம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் கோவிந்தராஜ்(53) என்பவர் வைத்து நடத்தும் காலணி கடையிலும் ரூ2 ஆயிரம் கொள்ளை போனது. இது குறித்து கொள்ளிடம் வியாபாரிகள் சங்கத்தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கொள்ளிடம் காவல்துறையில் கொடுத்த புகாரில் விசாரணை நடைபெறுகிறது.  இதற்கிடையே சம்பவத்தன்று இரவு சுமார் 2 மணியளவில் ஒரு மோட்டார் பைக்கில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் முகத்தில் துணியால் கட்டி கையில் இரும்பு கம்பி ஒன்றை எடுத்துச் சென்றதாக ரயில் நிலைய சாலையில் உள்ள ஒரு தனியார் செக்யூரிட்டி ஒருவர் நேரில் பார்த்ததாகவும், உடனே இதுகுறித்து கொள்ளிடம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறினார். இந்த தகவலை தெரிவித்த 10 நிமிடத்திற்கு பிறகே இந்த திருட்டுச் சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.