நடந்து முடிந்த அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, சி.ஐ.டி.யு தனது 16 வது அகில இந்திய மாநாட்டை சென்னையில், ஜனவரி 23-27 தேதிகளில் நடத்த உள்ளது. வரவேற்புக்குழு தோழர்களின் உழைப்பு மாநாட்டினை தமிழக தொழிலாளி வர்க்கத்திடம் எடுத்து செல்வதாகவும், மாநாட்டை நடத்தும் அகில இந்திய நிர்வாக க்குழு, தனது அறிக்கை தயாரிப்பு மூலம், உலக தொழிலாளர்களே ஒன்று சேர்வீர் என்ற மகத்தான முழக்கத்தை நோக்கி முன்னேற அழைக்கிறது. கருத்தும் களமும் ஒன்று சேர்ந்து, பொங்கிப் பெருகும் சங்கமமாக அகில இந்திய மாநாடு சி.ஐ.டி.யு ஊழியர்களுக்கு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கம் தன் உரிமைக்காக, பாதுகாப்பிற்காக, வாழ்க்கைத் தேவைக்காக போராடி வருவதைக் காண முடிகிறது. அதன் விளைவே வளர்ந்த நாடுகளில் தங்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பகுதி தொழிலாளர்களையும், ஆதரவுக் கரம் நீட்டும் சகோதர இயக்கங்களையும் காண முடிகிறது. இது வர்க்க ஒற்றுமைக்கான மையப்புள்ளியாகும். அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழிற்சங்க போராட்டங்களுடன், மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வக் குழுக்கள் உள்பட இணைந்து நிற்கும் சூழல், நம்பிக்கை அளிக்கிறது. நடந்து முடிந்த பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றோரின் எண்ணிக்கையும், பங்கேற்ற அமைப்புகளின் எண்ணிக்கையும், ஆதரவு தெரிவித்து களம் இறங்கிய தொழிற்சங்கம் அல்லாத அமைப்புகளும், இந்தியாவில் வளரும் போராட்ட எழுச்சியை வெளிப்படுத்துகின்றன. மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக எடுத்த முயற்சியில், சி.ஐ.டி.யுவும் முக்கியமான பங்களிப்பை செய்துள்ளது. போராட்டங்கள் அதிகரித்தாலும், ஆளும் வர்க்கத்திற்கு எதிரான செயல்பாடுகள் மேம்பட வேண்டியுள்ளது. அதை அனைத்து அமைப்புகளும் செய்வதில்லை. சி.ஐ.டி.யு வர்க்க ஒற்றுமைக்காக கூட்டு இயக்கங்களை வலுப்படுத்த போராடுகிற அதே நேரத்தில், ஆளும் வர்க்கத்திற்கு எதிரான ஆளப்படுகிற வர்க்கத்தின் ஒற்றுமையையும், கட்டமைக்க விரும்புகிறது. மாநாட்டின் மூலம் தனது ஊழியர்களையும், இணைப்பு சங்க நிர்வாகிகளையும் இந்த உயரிய நோக்கத்திற்காக நடைபோட தூண்டுகிறது.
சென்றடையாதவர்களை சென்றடைய
போராட்டங்கள் எதிர் கட்சி என்ற உணர்வில் மட்டுமல்லாமல், கொள்கை மாற்றங்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பது, தொழிலாளி வர்க்கத்திற்கு முழுதாக சென்றடையவில்லை. சி.ஐ.டி.யு தனது 14வது மாநாட்டை, கேரள மாநிலம் கண்ணூரில் நடத்திய போது, சென்றடையாதவர்களை சென்றடைய எனும் முழக்கத்தை முன் வைத்தது. இது அமைப்பின் முன்னணி ஊழியர்களுக்கான முழக்கமாக மாற வேண்டும் என்பதை வலியுறுத்தியது. இன்றும் அதை தீவிரமாக அமல்படுத்த அறைகூவி அழைக்கிறது. ஒரு நாட்டில் தொழிலாளர்கள் தனக்கான ஊதியத்தை கூட்டுபேரம் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்றால், அங்கே ஜனநாயகம் இருக்கிறது என்று பொருள். ஆனால் இந்தியாவில் அத்தகைய ஜனநாயகம் அரிக்கப்பட்டு வருகிறது என்பதை கணக்கில் கொண்டு தான் சென்றடையாதவர்களை சென்றடைய, அமைப்பை பலப்படுத்துவோம் என்று அழைக்கிறது. குறிப்பாக இந்தியாவில் சுமார் 70 சதமான தொழிலாளர்கள் எந்த ஒரு தொழிற்சங்கத்தின் கீழும் திரட்டப்படவில்லை. அவர்களைத் திரட்டுவது மகத்தான பணியாக முன்னெடுக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமான கூலியை உறுதி செய்யவும் அதை பேரம்பேசி உயர்த்திக் கொள்ளவுமான உரிமை - மனிதன் வாழ்வதற்கான அடிப்படை ஜனநாயக உரிமையுடன் இணைந்தது. இதை சிஐடியு உணர்ந்து, வலியுறுத்துகிறது. தற்போது, இந்திய தொழிலாளர்களில் சுமார் 92% அதாவது, 44 கோடி பேர், அமைப்பு சாராத, தொழிலாளர்கள். இவர்களுக்கு எந்த ஒரு சமூகப்பாதுகாப்பும் இல்லை. வாரவிடுப்பு, மருத்துவ விடுப்பு, குழந்தைகளுக்கான கல்வி, பென்சன் ஆகியவை உத்திரவாதப் படுத்தப்படாமல், சமூகப் பாதுகாப்பு முழுமை அடையாது. துரதிர்ஷ்டவசமாக இந்த சமூகப் பாதுகாப்பற்ற தொழிலாளர்கள், எந்த ஒரு தொழிற்சங்கத்தின் கீழும் திரட்டப்படாதவர்களாக உள்ளனர். தனது 50 ஆண்டுகால போராட்ட வரலாற்றில் சி.ஐ.டி.யு ஏராளமான போராட்டங்களைத் சுயேச்சையாகவும், இதர தொழிற்சங்கங்களுடன் கூட்டாகவும், சமூகப்பாதுகாப்பு கோரிக்கைகளுக்காக நடத்தியுள்ளது. அதன் விளைவாக நலவாரியம் மற்றும் சில செயல்பாடுகள் உருவாக்கப்பட்டு இருந்தாலும், அவற்றை மேம்படுத்த வேண்டியுள்ளது. ஒருபுறம் குறைவான தொகை, மற்றொருபுறம் ஒரு சிலருக்கு மட்டுமான நிதி உதவி என்ற அவலம் நலவாரியங்களில் உள்ளது. எனவே சமூக பாதுகாப்பு எல்லோருக்கும் என்ற புரிதலுடன், அமைப்பு சாரா தொழிலாளர்களைத் திரட்டும் போராட்ட களத்தில் சி.ஐ.டி. யு தன்னை முன்னிறுத்தி பணியாற்றுகிறது. மற்றொரு அவலமாக, காண்ட்ராக்ட், பயிற்சி, அப்ரெண்டிஸ், நீம் ( National Employability Enhancement Mission), குறிப்பிட்ட காலத்திற்கான வேலை (Fixed Term Employment) ஆகிய பெயர்களில் நடைபெறும் உழைப்புச் சுரண்டல். இந்த பெயர் கொண்டு அழைக்கப்படும் உழைப்பாளிகளும் நம்முடைய நாட்டில் திரட்டப்படாதவர்களாக உள்ளனர். இவர்களில் ஒரு பகுதி அமைப்பு ரீதியாக திரட்டப்பட்டால், குறைந்தபட்ச ஊதியமும் இல்லாமல், பட்டினியே வாழ்க்கையாக வாழும் அவலத்தை, நிர்வாகங்கள், வேலைநீக்கம் மூலம் செய்துவிடுகின்றன. எனவே நிரந்தரமற்ற தொழிலாளர்களைத் திரட்டுவது, பெரும் சவாலாக மாறியுள்ளது. இங்கு இரண்டு வகையில் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் மூலம், நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன. ஒன்று குறைவான கூலி; மற்றொன்று நிரந்தர தொழிலாளர்களின் கூட்டு பேர வலிமையை குறைப்பது. கடந்த இருபது ஆண்டுகளில் மூலதனக் குவிப்பிற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்ததே, மேற்கண்ட சுரண்டல் முறை தான். செல்வத்தின் பகிர்மானம் முதலாளிகளுக்கு சாதகமாகவும், தொழிலாளர்களுக்கு பாதகமாகவும் அமைய, இதுவே காரணமாக அமைந்துள்ளது. அரசே தனது ஊழியர்களிடம் சுரண்டல் முறையை அமலாக்கி வருகிறது. குறிப்பாக திட்டப்பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படாத நிலை நிரந்தரமாக நீடித்து வருகிறது. இதை எதிர்த்த போராட்டத்தில், மாபெரும் எழுச்சியை சி.ஐ.டி.யு உருவாக்கி வருகிறது. எல்லா மாநிலங்களிலும் லட்சக்கணக்கான பெண்கள் அங்கன்வாடி போன்ற துறைகளில் இருந்து ஆர்த்தெழுந்து போராடுவது வெளிச்சம் பாய்ச்சும் நிகழ்வுகளாகும். ஆக உழைப்புச் சுரண்டலில் இருந்து இந்திய தொழிலாளர் வர்க்கத்தை விடுவிக்க மாற்றுக் கொள்கை அவசியம். இதற்கான புதுப்பாதையை மாநாடு கட்டமைக்க இருக்கிறது. 2018 செப்டம்பர் 5 அன்று தில்லியை உலுக்கிய தொழிலாளர்-விவசாயி பேரணி இந்திய உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை பறைசாற்றியது. நிலம், நீர், காற்று என அனைத்தையும் வணிகமயமாக்கும் கொள்கையை வேரறுக்க இந்த ஒற்றுமை பயன்படும். சி.ஐ.டி.யுவின் ஸ்தாபகத் தலைவர் பி.டி.ரணதிவே, “தற்போதைய அரசாங்கத்தை மாற்றுவதற்காக தொடர்ச்சியாக போராடுவதும், விவசாயிகளுடன் அணிசேர்ந்து விவசாயப்புரட்சிக்கான, ஜனநாயக போராட்டத்திற்கான முன்னெடுப்புகளில் முன் நிற்பதும் அவசியம். இந்த நோக்கத்திற்காக தொழிற்சங்கம் அதன் முழு சக்தியை பிரயோகிப்பது மிக முக்கியக் கடமை”, என்றார். இப்போதும் பொருந்துவதாக இந்த வரிகள் உள்ளன.
ஆட்டோமொபைல் முதல் தகவல் தொழில்நுட்பம் வரை
சுரண்டல் முறைக்கு எதிரான போராட்டத்தை சீர்குலைக்கும் மற்றொரு வளர்ச்சியாக தொழில்நுட்பம், நிறுவனங்களுக்கு சாதகமாக பயன்படுகிறது. மார்க்ஸ் குறிப்பிட்ட ‘முடிந்துபோன உழைப்பு’(Dead Labour) இன்று செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் (Artificial Inteligence) என வளர்ச்சி பெற்றுள்ளன. செல்வக் குவிப்பை மேலும் ஊக்கப்படுத்தவும், தொழிலாளர்களின் கூட்டு பேர உரிமையை வலிமையிழக்கச் செய்யவும் இந்த நுண்ணறிவு இயந்திரங்கள் பயன்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் வேலை இழப்பையும் அதிகப்படுத்தி, வேலை வாய்ப்பு சந்தையில் கடும் போட்டியை உருவாக்கி உள்ளது. படித்த புதிய இளைஞர்களும், அனுபவம் கொண்டவர்களும் வேலைக்காக போட்டியிடும் சூழல் ஆட்டோ மொபைல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை ஆகியவற்றில் உருவாகியுள்ளது. மாருதி மற்றும் பல்வேறு ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளிலும், வெரிசான், காக்னிசண்ட் மற்றும் டாடா கன்சல்டன்சி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இத்தகைய பாதிப்பை தெரிந்து கொள்ள முடியும். சுரங்கம், பெட் ரோலியம், விமானம், ராணுவ தளவாடங்கள் என அனைத்தும், தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு, பொதுச் சொத்துக்களை சூறையாட வழிவகை செய்வது ஆட்சியாளர்களின் அன்றாட பணியாக மாறியுள்ளது. சி.ஐ.டி.யு அமைப்பு உருவான 1970 களில் சம்பள வெட்டு, போனஸ் மறுப்பு, சட்ட விரோத கதவடைப்பு, லாக் அவுட், லே ஆஃப் ஆகியவை இருந்துள்ளது. அதே நிலை இன்று வேறு தொழிற்சாலைகளில், நடைபெறுகிறது. எனவே முதலாளித்துவ சமூகத்தில், இத்தகைய கொடுமைகள் நீடிக்கும் என்பது வெளிப்படை. இத்தகைய தாக்குதலை எதிர்த்து, நாடு தழுவிய போராட்டம் தவிர்க்க முடியாதது என அன்றைய சி.ஐ.டி.யு முன் வைத்த வாதம் இன்றைக்கும் பொருந்துகிறது. இத்தகைய அவலங்களை எதிர்த்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது. கார், இருசக்கரம், பஸ் மற்றும் வணிக வாகன உற்பத்தி செய்யும் தொழிலாளர்களைக் கொண்ட கூட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த ஒருங்கிணைப்பும் அதன் மூலமான தொடர் கூட்டு செயல்பாடுகளும், தொழிலாளர்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியை வலுப்படுத்தவும், வர்க்க ஒற்றுமையை பலப்படுத்தவும் உதவி செய்யும் என சி.ஐ.டி.யு உறுதியாக நம்புகிறது. ஒற்றுமை என்பது பெயரளவிலான ஒற்றுமை அல்ல. சுரண்டலுக்கு எதிரான போராட்டத்திற்கும், அவ்வாறு போராடும் மக்களை ஒருங்கிணைக்கவும் தான் என்ற புரிதலுடன் சி.ஐ.டி.யு வீரநடை போட்டு வருகிறது.
தொழிலாளர் விரோத பாசிச அணுகுமுறை
ஹிட்லர் தனது யூத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, முதல் உலகப்போரில் ஜெர்மன் ஏன் தோற்றது என்பதை தனது மெயின் கேம்ப் நூலில் எழுதியுள்ளார். அதில் பிரான்சை வீழ்த்தும் பாதையில் ஜெர்மானிய படைகள் தீவிரமாக இருந்த போது, ஜெர்மானிய தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தில் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தனர். அது உளவியல் ரீதியாக படை வீரர்களை பாதித்தது. எனவே நாஜிப்படையின் எழுச்சிக்கு முன்னால், தொழிற்சங்க உரிமைகள் கூடாது என்றான் ஹிட்லர். அதுவே இப்போது இந்தியாவில் நடக்கிறது. இந்திய தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்க, பாசிச பாஜக ஆட்சி தீவிரம் காட்டுகிறது. சட்டங்களைத் திருத்துகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் மூலதனம் தங்கள் நாடுகளில் அடையும் லாபத்தை விடவும், அதிக லாபம் பெற வாய்ப்புள்ள நாடுகளுக்கு பாய்கிறது. வேலையின்மை அதிகரித்துள்ள, தொழிற்சங்க உரிமைகள் குறைவாக கொண்ட, சம்பள விகிதத்தில் பின் தங்கியுள்ள இந்தியா போன்ற நாடுகள் பன்னாட்டு மூலதனத்தின் தேவைக்கு களமாகியுள்ளது. நமது நாட்டின் சுதந்திர தினத்தன்று பிரதமர் நிகழ்த்தும் உரையில், செல்வந்தர்களே செல்வத்தை உருவாக்குவதாக கூறுகிறார். அவ்வாறு செல்வங்களை தனியாருக்கு, அந்நியருக்கும் தாரைவார்க்கும் மோடி தேசபக்தர்; மோடியின் பேச்சையும் கொள்கையையும் எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர். செல்வந்தர்களுக்கான செயல்பாட்டில், தொழிற்சங்க சட்டங்களும் தப்பவில்லை. பிரிட்டிஷாரைப் போலவே வர்க்கங்களை பிரித்தாளுகிற செயலில் பாஜக ஆட்சி முனைப்புடன் செயல்படுகிறது. உதாரணம் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கு பதிவேடு ஆகியவை வர்க்க ஒற்றுமைக்கு பாதகம் விளைவிக்கும். இது போன்ற சட்ட திருத்தங்களை எதிர்த்து சி.ஐ.டி.யு போராடுகிறது. “உற்பத்தி, விநியோகம், பரிவர்த்தனை ஆகியவற்றிற்கான வழிமுறைகள் அனைத்தையும், சோசலிச அரசுகள் உருவாவதன் மூலம் செய்திட முடியும். உழைக்கும் வர்க்கத்தின் மீதான சுரண்டலை தடுக்க முடியும். சோசலிச லட்சியத்தின் மூலமே சமூகத்தை முழுமையாக விடுதலை செய்ய முடியும்”, என சி.ஐ.டி.யு தனது நோக்கத்தை குறிப்பிடுகிறது. 16 வது அகில இந்திய மாநாட்டின் வரவேற்புக் குழுவும், இந்த லட்சியத்தை வலுவாக பிரச்சாரம் செய்கிறது. வென்றெடுக்கும் போராட்டப்பாதையை தீவிரப்படுத்த தொழிலாளி வர்க்கத்தை, அதன் நேச சக்திகளை ஒருங்கிணைக்க அறை கூவி அழைக்கிறது.
கட்டுரையாளர் : மாநில துணைப் பொதுச் செயலாளர், சிஐடியு