tamilnadu

காவல் ஆய்வாளர் வீட்டில் வளர்ந்த சிறுமிக்கு சித்ரவதை?

தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் காவல் ஆய்வாளர் வீட்டில் வளர்ந்த 16 வயது சிறுமியை வீட்டு வேலைகள் செய்ய வற்புறுத்தியதாக எழுந்த புகாரினை தொடர்ந்து சிறுமியிடம் குழந்தைகள் நலக்குழுவினர் நேரில் விசாரணை நடத்தினர்.பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஆதரவற்ற 16 வயது சிறுமியை, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், தஞ்சாவூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை அந்த சிறுமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தான் பட்டுக்கோட்டையில் வசித்தபோது இருந்த சிலருடன் வந்து மனு கொடுத்தார். அப்போது காவல் ஆய்வாளர் வீட்டில் என்னை வீட்டு வேலைகள் செய்ய சொல்லி வற்புறுத்துவதாக புகார் கூறினார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் உத்தரவின்படி, அந்த சிறுமி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து குழந்தைகள் நலக்குழுமத்தின் தலைவர் உஷாநந்தினி தலைமையில் அக்குழுவினர் சிறுமியிடம் வியாழக்கிழமை நேரில் விசாரணை நடத்தினர்.பின்னர் செய்தியாளர்களிடம் உஷாநந்தினி கூறுகையில், பட்டுக்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் பிறந்த அந்த சிறுமியை, குழந்தைகள் இல்லாத வயதான அபயம்பாள் என்ற மூதாட்டி வளர்த்துள்ளார். வயது முதிர்வின் காரணமாக மூதாட்டி வேலை ஏதும் செய்யமுடியாமல் இருந்ததால், அவருக்கு உதவியாக இருந்துள்ளார். அப்போது 8 ஆம் வகுப்பு வரை பட்டுக்கோட்டையில் படித்த அந்த சிறுமி சில நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். ஒரு நாள் ஆசிரியை சிறுமியிடம் கேட்டபோது, தன்னுடைய நிலை குறித்து கூறியதால், ஆசிரியை குழந்தைகள் நலக்குழுவிடம் 2017-ல் ஒப்படைத்துள்ளார்.

இங்கு வளர்ந்து வந்த சிறுமியை, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முறைப்படி விண்ணப்பித்து இந்த சிறுமியை தான் வளர்க்க விரும்புவதாக கூறி உரிய அனுமதி பெற்று அழைத்து சென்றார். பின்னர் மூன்று மாதத்துக்கு ஒருமுறை சிறுமியிடம் நேரில் விசாரித்தபோது எந்தவித புகாரும் தெரிவிக்கவில்லை. ஆனால் டிச.9 அன்று சிறுமி அபயம்பாளின் உறவினர்கள் சிலரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து புகார் அளித்தார். தற்போது அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் அவர் குழப்பத்தோடு அழுதபடி இருக்கிறார். அடிக்கடி சந்திரா அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் என கூறுகிறார். இதனால் ஒரு வார காலத்துக்கு காப்பகத்திலேயே அவரை வைத்து கவுன்சிலிங் வழங்க உள்ளோம். இதுகுறித்து மகளிர் காவல் ஆய்வாளர் சந்திராவை விசாரணைக்கு அழைத்துள்ளோம். அதேபோல் தேவைப்பட்டால் புகார் அளித்த அபயம்மாளின் உறவினர்கள் பவானி உள்ளிட்டோரை விசாரணைக்கு அழைப்போம். சிறுமியிடம் ஒரு வாரம் கழித்து மீண்டும் விசாரணை நடத்தி அதன்பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
 

;