தஞ்சாவூர், மே 13- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்திற்குட்பட்ட செருவாவிடுதி, காலகம், குறிச்சி, பின்னவாசல் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 41 க்கும் மேற்பட்ட செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். பேராவூரணி வட்டாரத்தில், கொரோனா தொற்று பரவாமல் கடந்த 40 தினங்களாக, மருத்துவர்களுடன் இணைந்து அயராது பாடுபட்டு வந்தனர். இந்நிலையில் களத்தூர், சாணாகரை ஆகிய இடங்களில் கொரோனாத் தொற்று 2 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியிலும் செவிலியர்கள், தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை உலக செவிலியர் தினத்தன்று, வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன் தலைமையில், டாக்டர்கள், மக்கள் பிரதிநிதிகள், அங்கன்வாடிப் பணியாளர்கள், பைங்கால் ஊராட்சி சாணாகரை கிராமத்தில் செவிலியர்கள் 16 பேருக்கும், சால்வை அணிவித்து, மலர்தூவி, செவிலியர் சேவையைப் பாராட்டினர். டாக்டர்கள் பொன்.அறிவானந்தம், தீபா, சரண்யா, நிஷானி, ஊராட்சி தலைவர் அமுதா சுப்பிரமணியன், துணைத் தலைவர் கா.திருஞானம், ஊராட்சி செயலாளர் இந்துமதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், செவிலியர் கீதா, கிராம சுகாதார செவிலியர்கள் லில்லி மேரி, ரேணுகா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல களத்தூர் கிராமத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் பணியாற்றி வரும் செவிலியர்களும் கவுரவிக்கப்பட்டனர்.