சங்ககிரி அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சேலத்திலிருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொன்டு சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்து பேருந்து சாலையோரத்தில் உள்ள தென்னை மரத்தில் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதையறிந்த ஊர்பொதுமக்கள் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சங்ககிரி பழைய எடப்பாடி சாலை பகுதியைச் சேர்ந்த திருமணத்திற்கு மேளம் வாசிப்பவர் கணேசன் (65) என்பவர் பலத்த காயமடைந்ததில் உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்தவர்களை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைதொடர்ந்து இரு கிரேன்கள் மூலம் விபத்துக்குள்ளான தனியார் பேருந்தினை மீட்டனர். இதையடுத்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.