tamilnadu

img

மோடிக்கு ஆமாம் சாமி போடும் அதிமுக கூட்டணியை படுதோல்வி அடைய செய்க..... சேலம் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு....

சேலம்:
மோடி கொண்டு வரும் மக்கள் விரோத திட்டங்களை ஆமாம் சாமி போட்டு ஆதரிக்கும் அதிமுக கூட்டணியை சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று தமிழக மக்களுக்கு சீத்தாராம் யெச்சூரிவேண்டுகோள் விடுத்தார்.

சேலம், சாரதா கல்லூரி சாலையில் உள்ளதெய்வீகம் திருமண  மண்டபத்தில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில்,சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர்சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, நாடு மோசமான   சூழ்நிலையில் உள்ளது. நம் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றது. குடியுரிமை சட்டம் கொண்டு வந்து குடிமக்களின் உரிமை பறிக்கப்படுகிறது,  பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கக் கூடிய சிறு, குறு, நடுத்தரத்தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு நலிந்துவிட்டன. வேலைவாய்ப்பு பறிபோய்  உள்ளது. கடந்த ஓர் ஆண்டாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி பல்வேறு கோரிக்கைகளை வைத்துபோராடி வருகிறோம். மக்களுக்கு மாதந்தோறும் இலவசமாக 10 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்க வேண்டும் எனக் கோரியும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால், குடோன்களில்  உள்ள 10 கோடி டன் உணவுப் பொருட்கள் தற்போது நாசமாகி வருகின்றன.

சேலம் உருக்காலை பொதுத்துறையாக நீடிக்க...
சேலம் உருக்காலை தொடர்ந்து பொதுத்துறையாக நீட்டிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால், அதை தனியாருக்குத் தாரை வார்க்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் சொத்து இந்தியாவில்  சூறையாடப்படுகிறது. இந்த பகல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். பிரதமர் மோடியின் சுயசிந்தனையே  அம்பானியையும்,  அதானியையும்வளர்ப்பது தான். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆக வேண்டும் என்று செயல்படக்  கூடிய அரசு  பாஜக அரசு. 

லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் தில்லியில் கொடிய வேளாண் விவசாய சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த 100 நாட்களில் 300க்கும் மேற்பட்டவிவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால், விவசாயிகள் போராட்டத்தையும், விவசாயிகளின் கோரிக்கையையும் மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வேளாண்  சட்டத் திருத்தத்தைவாபஸ் பெற வேண்டும்.கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய  ரூ.8 லட்சம் கோடி  கடனை தள்ளுபடிசெய்வதை  ஆதரிக்கும் மோடி,  விவசாயிகளின்கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறார். இதனால்விவசாயிகளின் வாழ்வாதாரம் காவு கொடுக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பு, 500, 1000 ரூபாய் பணம்செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புகளால் கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோயின. ஜனநாயக உரிமையை பறித்துவரும் மோடி அரசு, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவற்றை கையில் வைத்துக்கொண்டு மிரட்டி வருகிறது என்று குற்றம்சாட்டினார். பாசிச பாணியில் பாஜக அரசு செல்கிறது.  இதனை அனுமதிக்கமாட்டோம், அரசின்  கொள்கைகளை விமர்சித்தால்,  போராட்டம் நடத்தினால் தேச விரோத சட்டத்தில் கைது செய்கிறார்கள். எனவே தான் இந்த அரசை எதிர்க்கிறோம். 

மத்திய அரசு எடுக்கும் மக்கள் விரோத முடிவுகளை தமிழக  அரசு ஆதரிப்பதோடு,  எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும்  ஆமாம் சாமி போட்டு மோடிக்கு  ஜால்ரா அடித்து வருகின்றனர் என சீத்தாராம் யெச்சூரி தமிழிலேயே பேசினார்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு,  சிலிண்டர் எரிவாயு விலை உயர்வு  விண்ணை முட்டுகிறது.மக்களுடைய வாழ்வுரிமை மிக மோசமாக சீரழிந்து வருகிறது. தேசத்தின் சொத்துக்களை கொள்ளை அடிக்கின்றனர். இதனையெல்லாம்  தடுத்து நிறுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும். மாற்றுப் பொருளாதார அரசியலை அமல்படுத்த வேண்டும். திமுகவிடம்  மாற்று அரசியல் உள்ளது.  தர்மம், நியாயம்,  கட்டுப்பாட்டை மீறி  பாஜக அரசு செயல்படுகிறது. எனவே மிகப்பெரிய அளவில் பாஜக - அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்,  அந்தக் கடமை தமிழக மக்களாகிய உங்களுக்கு உள்ளது என்றார்.முன்னதாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சிபிஎம் சேலம் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், ஆறுமுக நயினார், சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு, சிபிஎம் சேலம், நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், முன்னணி ஊழியர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

;