1901ஆம் ஆண்டு நெல்லூரில்உள்ள வேணுகோபால சாமி கோயிலில் தலித் மக்கள் நுழைவதற்காகப் பிரச்சாரம் செய்து உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தவர் பொட்டி ஸ்ரீராமுலு.விடுதலைக்குப் பிறகு தெலுங்கு மக்களின் நலன்களைப் பாதுகாக்க சென்னையைத் தலைநகராகக் கொண்ட தனிமாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை தெலுங்கு மக்களால் எழுப்பப்பட்டது. இந்தக் கோரிக்கையைப் பிரதமர் ஜவகர்லால் நேரு போன்றவர்கள் நிராகரித்தனர். ஆந்திர மாநிலம் உருவாக்கப்படாததால், ஸ்ரீராமுலு சென்னையில் உள்ள அவரது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை 1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் நாள் அன்று துவக்கினார். புதிய மாநிலம் அமைவதைப் பற்றிய அறிக்கை வெளிவராததால் ஸ்ரீராமுலு தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதன் காரணமாக டிசம்பர் 15ஆம் நாள் இறந்தார்.
அவரது சவ ஊர்வலம் சென்னையில் நடந்தபோது, ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சேர்ந்து கொண்டு, அவரது தியாகத்தைப் பாராட்டிக் கோஷங்களை எழுப்பினர். ஊர்வலம் கலவரமாக மாறிப் பொது சொத்துகள் உடைக்கப்பட்டன. கலவரம் விஜயநகரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, பீமவரம், ராஜமுந்திரி, ஏலூரு, குண்டூர், தெனாலி, ஒங்கோல், நெல்லூர் போன்ற இடங்களுக்குப் பரவியது. ஏழு பேர் காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர். மக்கள் போராட்டத்தால் சென்னை மற்றும் ஆந்திர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலை மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்தது. டிசம்பர் 19 அன்று பிரதமர் நேரு தனி ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.1953ஆம் ஆண்டு அக்டோபர் 1அன்று தெலுங்கு பேசும் மக்களுக்காக ஆந்திர மாநிலம் நிறுவப்பட்டது. கர்னூல் தலைநகரானது.
===பெரணமல்லூர் சேகரன்===