tamilnadu

img

நடக்கவே முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு விதியை தளர்த்தி உதவுமா அரசு?

மதுரை, அக். 5 - மதுரை மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மேனகாதேவி (29). சண்முகசுந்தரம்-இந்திராவின் ஒரே மகள். இவர்களில் சண்முகசுந்தரம் ஒரு மாற்றுத்திறனாளி. இவர் தற்போது அவரது தாய்-தந்தையருடன் பழனியில் வசித்து வருகிறார். சண்முகசுந்தரத்தின் மகளான மேனகாதேவியும் கை-கால் முடியாத ஒரு மாற்றுத்திறனாளி. பந்துகிண்ணமூட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் நடக்கமுடியாத மாற்றுத்திறனாளியாக மாறியுள்ளார். இவரை தூக்கிச்சென்றுதான் காலைக்கடன்களை கழிக்க வைக்க முடியும். அந்தளவிற்கு முடியாதவர், இவருக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1000 மட்டும் கிடைத்துவருகிறது. தாயார் இந்திரா மகளுக்கு துணையாக வீட்டிலேயே இருக்கிறார். இந்திராவின் தந்தை ராமச்சந்திரன் (78) தையல் கலைஞராக உள்ளார். அவரது வருமானத்தில் தான் நான்கு பேர் வாழ்ந்து வருகின்றனர். அதில் வீட்டு வாடகையாக ரூ.1,500 செலுத்திவருகின்றனர். மேனகாதேவி 10-ஆம் வகுப்பில் 454 மதிப்பெண்கள், 12-ஆம் வகுப்பில் 1058 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பி.காம். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தமக்கு மூன்று  சக்கர வாகனம் வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்களோ, 80 சதவீத ஊனம் இருந்தால் தான் வாகனம் வழங்க முடியும். உங்களுக்கு எழுபது சதவீதமே உள்ளது. விதியில் இடமில்லை எனக் கூறிவிட்டனர். அவருக்கு இன்றுவரை மூன்றுசக்கர வாகனம் கிடைக்கவில்லை. விதி இவருக்கு வினையாக அமைந்துவிட்டது.  

தனது மகளின் நிலையை எடுத்துக் கூறி உதவி செய்திடக் கோரி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அளித்துள்ளார் இந்திரா. அந்த மனுவில் தனது மகளுக்கு வேலை வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது மனுவை பரிசீலித்த அரசு, தகுதித்திறன் தேர்வு எழுதி வேலைக்குச் செல்லலாம் எனக் கூறியுள்ளது. இது குறித்து மேனகாதேவி கூறுகையில், எனது தந்தை என்னைப் போன்று மாற்றுத்திறனாளி. எனது தாய் மற்றும் தாத்தா-பாட்டிக்கு பின்னால் என் நிலை என்னவாகும்? தன்னம்பிக்கை எனக்குள்ளது. ஆனால், என்னை யார் பாதுகாப்பது என்ற கேள்வி மட்டும் என்னுள் எழுந்து கொண்டேயிருக்கிறது என்றார்.? அரசு அளித்துள்ள பதில் சரிதானே. தகுதித்தேர்வு எழுதி வேலைக்குச் செல்லலாமே எனக் கேட்டதற்கு... அந்த முயற்சியை நான் மேற்கொண்டுள்ளேன். ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. இதை எங்கள் ஊரைச் சேர்ந்த சி.ராமகிருஷ்ணனிடம் தெரிவித்தேன். அவர் உடனடியாக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சௌந்தர்ராஜன் என்பவரிடம் பேசினார். இதையடுத்து அவர் எனக்கு சில புத்தகங்களை வாங்கிக் கொடுத்துள்ளார்; படித்துவருகிறேன்.

இருப்பினும் எனது உடல்நிலையை கருத்தில்கொண்டு அரசு கருணையோடு பரிசீலித்து எனக்கு உதவிட வேண்டுமென்றார். மேனகாதேவியின் தாயார் இந்திரா கூறுகையில், எனது மகளின் பிரச்சனையை சரி செய்துவிடலாம் எனக் கூறினார்கள். எனது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உடனடியாக மதுரை மருத்துவமனையில் எனது மகளை சிகிச்சைக்காக சேர்த்தேன். எனக்கு போக்குவரத்து செலவிற்கு உதவியதும் சி.ராமகிருஷ்ணன் தான். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தில் அன்றைக்கு மாநிலத் தலைவராக இருந்த என்.பழனிசாமியை அவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் போக்குவரத்து செலவிற்காக ரூ.10 ஆயிரம் அளித்தார். மருத்துவர்கள் எனது மகளின் பிரச்சனையைத் தீர்க்க போராடிப்பார்த்தனர். கடைசியில் பந்துகிண்ணமூட்டு உள்ளிட்ட எலும்புகள் தேய்ந்துவிட்டன. எனவே வாய்ப்பில்லை எனக் கூறிவிட்டனர். என்னுள் இருந்த மகிழ்ச்சி மறைந்துவிட்டது. ஆனால், எனது தன்னம்பிக்கை மட்டும் குறைந்துவிடவில்லை. எனது மகளின் வேலைக்கான கோரிக்கையை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் மீண்டும் கருணையோடு பரிசீலிக்கவேண்டும். விதி ஒரு புறம் இருந்தாலும் விதியை தளர்த்தி எனது மகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

;