சேலத்தில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மீது லாட்டரி விற்பனை கும்பல் நடத்திய கொடூர தாக்குதலுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் கார்த்திக், மாநில செயலாளர் சிங்காரவேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சேலம் மாநகர பகுதிகளில் தொடர்ந்து போதைப் பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்தும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மனு கொடுப்பது, போராட்டம் நடத்துவது என ஜனநாயக ரீதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த சேலம் மாநகராட்சி 58ஆவது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி அவருடைய கணவர் சதீஷ் மற்றும் அவருடைய அடியாட்கள் அருண் உள்ளிட்ட நான்கு கயவர்கள் இன்று காலை முதல் கொலை செய்யும் நோக்கத்தோடு மாவட்டச் செயலாளர் பெரியசாமியை நோட்டமிட்டு வந்துள்ளனர்.
காலை சுமார் 9 மணியளவில் பெரியசாமியை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கி லாட்டரி சீட்டை எதிர்த்து எதற்காக இயக்கம் நடத்துகிறீர்கள்? போதைப் பழக்கத்திற்கு எதிரான விஷயத்தில் நீ ஏன் தலையிடுகிறீர்கள்? எனக்கூறி இரும்புக் கம்பிகளை கொண்டு கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது பெரியசாமி சிகிச்சை பெற்று வருகிறார்.
போதையற்ற தமிழ்நாடு என்னும் மகத்தான நோக்கத்தோடு ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தினை கடந்த ஐந்து மாதங்களாக நடத்தி வருகிறோம். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் திருச்சியில் வாலிபர் சங்க கிளைச் செயலாளர் தெளபிக் கஞ்சா விற்பனைக்கும்பலால் தாக்கப்பட்டார். இன்று சேலம் மாவட்டச் செயலாளர் பெரியசாமி தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். இந்தச் சம்பவங்கள் தொடர்கதையாகி விடக்கூடாது.
இப்படியான நேரங்களில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது போதை பொருள் விற்பனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கினை பதிவு செய்ய வேண்டும். இவையெல்லாம் தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை செய்யும் சமூக விரோத கும்பல்கள் எவ்வளவு தீவிரமாக இயங்குகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டுகள் என்பதை காவல்துறை உணர வேண்டும்.
சேலம் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சமூக விரோதிகள் சதீஷ், அருண் உள்ளிட்ட நான்கு நபர்களையும் உடனடியாக போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
இந்த கொடூரத் தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு உடனடியாக கண்டன இயக்கங்களை நடத்திடுமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.