tamilnadu

img

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்குகிறது தமிழகம்.... டிச. 1 சிஐடியு...   டிச. 2 விவசாயிகள் சங்கம் போராட்டம்....

சென்னை:
தில்லியில் விவசாயிகள் மீதான கொடூரத்தாக்குதலுக்கு  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்திய மத்திய பாஜக அரசைக்கண்டித்து டிசம்பர் 2அன்று தொடர் முழக்கப்போராட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர்  வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

பல மாதங்களுக்கு முன்பாகவே தில்லியில் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்தும், விவசாய சங்க தலைவர்களை அழைத்து கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தாமல், தற்போது காவல்துறையினரை ஏவிவிட்டு விவசாயிகள் மீதான கொடூரமான தாக்குதலை நடத்தி மத்திய பாஜக அரசு அராஜகப்போக்கில் ஈடுபட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். 

விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய பாஜக அரசை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் 2020, வேளாண் விளை பொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசர சட்டம்2020, விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவை அவசர சட்டம் 2020,  மின்சார திருத்த சட்ட மசோதா 2020 மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை மத்திய பாஜக அரசு உடனடியாக ரத்து செய்திடக்கோரி டிசம்பர்2 அன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறைகூவல் விடுக்கிறது .

தில்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழக  விவசாயிகள் தங்கள் பேராதரவையும், ஒற்றுமையும் வெளிப்படுத்தும் விதமாக டிசம்பர் 2 அனைத்து விவசாய சங்கங்களின்கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்திடதீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு  அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சிஐடியு
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 1 அன்று மாநிலம் தழுவிய அளவில்  ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநிலக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தாக்குதலை எதிர்கொண்டு வீரத்துடன் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை  தில்லியை விட்டு செல்லமாட்டோம் என்று உறுதியுடன் போராடி வரும் விவசாயி களுக்கு   தொழிலாளி வர்க்கம் தனது ஆதரவை தெரிவிக்க வேண்டியது கடமையாகும்.

ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் எதிர்ப்பைதெரிவிக்கும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய பாஜகவைகண்டித்தும், போராடும் விவசாய அமைப்புகளை அழைத்துப்பேசி சுமூக தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தியும் சிஐடியு சார்பில்டிசம்பர் 1 செவ்வாய்க்கிழமையன்று   அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு    ஆர்ப்பாட்டத்தை நடத்திடுமாறு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு அறைகூவல் விடுக்கின்றது.இந்த ஆதரவு இயக்கத்தில் அனைத்து சிஐடியு இணைக்கப்பட்ட சங்கங்களும் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள் கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.