வாக்குப்பதிவு நாளன்று வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பிப்.19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலின் வாக்குப்பதிவு நாளன்று வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்று நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர் யாருக்கும் சம்பள பிடித்தமோ சம்பள குறைப்போ இருக்க கூடாது. உத்தரவுகளை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.