மேலூர்:
மதுரை மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது மழை பெய்தது. இதன் தாக்கம் மேலூர் தாலுகாவிலும் இருந்தது.மழையை எதிர்பார்த்து நெல் பயிரிட்டிருந்த மேலூர் பகுதி விவசாயிகள் தற்போது நிம்மதியடைந்துள்ளனர். மேலூர்தாலுகாவில் 90 சதவீத கண்மாய்களில் போதுமான தண்ணீர் உள்ளது. ஆயினும் பனங்காடி உள்ளிட்ட கடை மடை பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்கவில்லை.
குலைநோய் தாக்குதல்
தொடர்ந்து மழை பெய்ததால் மேலூர் பகுதி விவசாயிகள் நெல்லிற்கு முறையாக தண்ணீர் பாய்ச்சமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் முருகன். மேலும் அவர் கூறுகையில், இதனால் நெல்லில் குலைநோய் தாக்குதல் இப்போது தென்படத்தொடங்கியுள்ளது. வேளாண்துறையும், மாவட்ட நிர்வாகமும் விளை நிலங்களை ஆய்வு செய்து குலை நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்துஆலோசனை வழங்க வேண்டும். அடுத்ததாக விவசாய வேலைகளுக்கு போதுமான தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டார்கள். விவசாய வேலை நடைபெறும் இந்தத்தருணத்தில் நூறு நாள் வேலையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமென ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட் டுள்ளது. இதன் மூலம் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய வேலைக்கு வரும்வாய்ப்பு உள்ளது என்றார்.
100 நாள் வேலையால் பாதிப்பா?
100 நாள் வேலையால் விவசாயவேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்சிரமம் உள்ளதாக கூறப்படுவது குறித்துஅகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கத்திடம் கேட்டதற்கு, “தமிழகத்தில் மொத்தம் 12,524 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் அதிகபட்சமாக 50 ஊராட்சிகளில் வேண்டுமானால் அத்தி பூத்தாற் போல் இந்தப் பிரச்சனை எழ வாய்ப்புள்ளது. இதை சரிசெய்ய வேண்டியது உள்ளாட்சி நிர்வாகங்கள் தான். ஒரு குடும்பத்தில் ஒருவ
ருக்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டுமென்பது விதி. விவசாயப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே உள்ளாட்சி நிர்வாகங்கள் விவசாய வேலைகள் பாதிக்காதவாறு 100 நாட்கள் வேலை ,தொழிலாளர்களுக்கு வழங்கி முடித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் அந்தத் தொழிலாளர்கள் விவசாய வேலைகளுக்கு நிச்சயம் செல்வார்கள். அவர்கள் செல்ல முடியாமல் இருப்பதற்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் தான் காரணம்.
களை எடுக்கும், நாற்று நடும் தொழிலாளர்களுக்கு ரூ.150 மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. 100 நாள் வேலையிலும் சட்டக்கூலி ரூ.256 வழங்குவதில்லை. விவசாய வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் கட்டுபடியான கூலி கிடைக்கவில்லை. விவசாயிகளும்-விவசாயத் தொழிலாளர்களும் நாட்டின்இரு கண்கள். விவசாய வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை கூலி வழங்க வேண்டும். இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் விவசாய வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ரூ.300 கூலி வழங்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.விவசாயத் தொழிலாளர்களை விவசாயிகள் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உள்ளாட்சி நிர்வாகங்களும் விவசாய வேலை நடைபெறுவதற்கு முன்பு அவர்களுக்கு 100 நாள்வேலையை வழங்க வேண்டும். இக் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டுமென்றார்.