tamilnadu

img

உச்சநீதிமன்றத் தீர்ப்பு பெருத்த ஏமாற்றம்.... தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் விமர்சனம்..

சென்னை:
சேலம் –சென்னை எட்டுவழிச்சாலை திட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தீர்ப்பு பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் விமர்சித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சேலம் –சென்னை எட்டுவழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் டிசம்பர் 8 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.மத்திய அரசும், தமிழக அதிமுக அரசும், விதிமுறைகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும், இத்திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்காமலும் அள்ளித்தெளித்த அவசரகோலத்தில் எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தது.காவல் துறையை ஏவி விவசாயிகளை அச்சுறுத்தியும், வருவாய்த்துறை மூலம் மிரட்டல் விடுத்தும் அடாவடித்தனமான முறையில் நிலத்தை கையகப்படுத்தியது. விவசாயிகள் தங்கள் நிலஉரிமையை பாதுகாத்துக் கொள்வதற்காக கடும் எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். விவசாயிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக அரசால் நினைத்தபடி பணிகளை துவக்கமுடியவில்லை.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் அரசு நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என்றும், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் திட்டத்தை செயல்படுத்துவது சட்ட விரோதமென்றும், எனவே, சேலம்- சென்னை வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.இந்த மேல்முறையீட்டு மனுவின் மீது தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், சட்டரீதியான மறு அறிவிக்கையை வெளியிட்டு, சுற்றுச்சூழல் அனுமதி பெற்று எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என்று கூறி மனுவை முடித்து வைத்திருக்கிறது.

அத்துடன், ஏற்கனவே, வெளியிட்ட அறிவிக்கையின் படி நிலம் கையகப்படுத்தியதற்கு விதிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தடை தொடரும் என்றும், எனவே விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திய நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் நிலத்தை பறிக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது. விவசாயிகளின் உணர்வுகளை கணக்கில் கொண்டு மத்திய – மாநில அரசுகள் எட்டுவழிச்சாலை திட்டத்தை தாங்களாகவே கைவிடுவதாக அறிவிப்பது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமைய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் நிலஉரிமையை பாதுகாக்கும் போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து ஒன்றுபட்டு தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.