சென்னை, ஆக.21- மிஷன் மங்கள் திரைப்படம் மாணவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கியமான திரைப்படம் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்துக்கு 2013ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மங்கல்யான் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியதை அடிப்படையாகக் கொண்டு இந்தியில் அக்சய் குமார் நடிப்பில் மிஷன் மங்கல் திரைப்படம் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படத்தின் சிறப்பு திரையிடலை இஸ்ரோ செயற்கைகோள் மையத்தின் முன்னாள் இயக்குநரும் சந்திரயான் 1 திட்ட இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரை சென்னை கே.கே. நகரில் உள்ள காசி திரையரங்கில் அரசுப் பள்ளி மாணவர்கள் 200 பேருடன் கண்டுகளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களிடையே விண்வெளி மற்றும் விண்வெளி அறிவியல் சார்ந்த ஆர்வத்தை தூண்டும் வகையில் இத்திரைப்படம் உள்ளதாக தெரிவித்தார். மங்கல்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து தத்ரூபமாக இத்திரைப்படம் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார். மேலும் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட உள்ளது குறித்து பேசிய அவர், அதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான் என்றார். இந்த சிறப்பு திரையிடலை ஸ்பெஸ் கிட்ஸ் நிறுவனம் சார்பாக டாக்டர் ஸ்ரீமதி என்பவர் ஏற்பாடு செய்திருந்தார்.