மதுரை:
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்குடிநீர் திட்டங்களை ஒப்பந்தமயமாக்கியதால் வாரியத்தின்பணம் கொள்ளை போகிறது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் மாநில தலைவர் பாலகுமார், மாநிலப் பொதுச்செயலாளர் ஆத்மாதுரை ஆகியோர் கூறினர்.மதுரையில் அவர்கள் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
குடிநீர் வடிகால் வாரியம் மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டதாகும். வாரியத்தின் மூலம் செயல்படுத்த வேண்டிய குடிநீர் திட்டங்களை ஒப்பந்த மயமாக்கி சீரழிக்கப்பட்டு வருகிறது. நிரந்தரப் பணியாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு இல்லாமல் அடிமாட்டு கூலிக்கு நியமிக்கப்படுகின்றனர். வாரியத்தின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகள் தொழிலாளர்களுக்கு சாதகமாக வழங்கியும் கூட வாரியம் அவற்றை மதிப்பதில்லை. தீர்ப்புகளை அமலாக்க மறுக்கிறது. வாரியம் சீரமைப்பு என்ற பெயரில் குடிநீர் வழங்கும் பணி தனியார் மயமாக்கப்படுகிறது.குடிநீர் வடிகால் வாரியத்தை பாதுகாப்பதற்கும், கொள்ளைபோகும் பணத்தை தடுப்பது குடிநீர் வடிகால் வாரிய ஊழி\யர்களின் பிரதானக்கடமையாக உள்ளது.
பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு
குடிநீர் வடிகால் வாரிய பணிகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்கக்கூடாது. வாரியமே அதை ஏற்று செய்ய வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக்கூடாது. அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது. விவசாயிகள் விரோத வேளாண் சட்டத்தை திரும்பப்பெறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.26-ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்த உள்ள பொது வேலை நிறுத்தத்தில் குடிநீர் வடிகால் பணியாளர்கள் முழுமையாக பங்கேற்பார்கள் என்றார்.முன்னதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மாநிலச் செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் பாலகுமார் தலைமையில் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பொருளாளர் வி.அழகுமலை, மாநிலக்குழு பொறுப்பாளர் சந்திரன், மாநில உதவித் தலைவர் ஆர்.தெய்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.