tamilnadu

img

மீண்டும் களை கட்டியது சென்னை மெரினா - மாமல்லபுரம் கடற்கரைகள....

சென்னை:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்திற்குப் பின் சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கடற்கரை, பொழுது போக்கு பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப் பட்டது. பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப் பட்டபோதிலும், மெரினா கடற் கரை மக்கள் செல்வதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவந்தது.

இந்தத் தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மெரினா கடற்கரை எப்போது திறக்கப்படும்? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், கடற்கரை திறக்கவில்லை என்றால் உயர் நீதிமன்றமே திறக்க உத்தரவிடும் என்றும் எச்சரித்தது.இதனையடுத்து, டிசம்பர் 14ஆம் தேதி பொதுமக்களுக்கு மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் திறக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த, நவம்பர் 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘நோய்த்தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின் பற்றி டிசம்பர் 14ஆம் தேதிமுதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, மெரினா கடற்கரையில் மக்கள் தகுந்த இடைவெளியைப் பின் பற்றாதவர்களிடம் 500 ரூபாயும், முகக்கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாயும் அபராதம் வசூலிக்க வேண்டும் என மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் எட்டு மாதங்களுக்குப் பிறகு திங்களன்று (டிச.14) காலை மெரினா கடற்கரை பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் மெரினா கடற்கரைக்கு வந்து நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டனர்.

மாமல்லபுரம்...
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்திலும் பார்வையாளர்கள் அனுமதிக் கப்படுவதால், மாமல்லபுரம் மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளது.கொரோனா பாதிப்பால், கடந்த ஒன்பது மாதங்களாகப் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்கள்  அனுமதிக்கப்படுவர் என தொல்லியல் துறை அறிவித்தது. இதனையடுத்து, (டிச. 14) பார்வையாளர்கள் வருகை தொடங்கியுள்ளது.இனிவரும் நாள்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாலும், ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி, கொரோனா சோதனை மேற் கொள்ளப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவர். இணைய தளம் வழியாக அனுமதிச் சீட்டினைப் பதிவுசெய்து கொள்ளலாம்.மேலும், 60 வயதுக்கு மேலுள்ள முதியோருக்கும், 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை எனத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

;