எண்ணூரில் அடிக்கடி வெளியேறும் நச்சு வாயுவால் பொதுமக்கள் பாதிப்பு
மக்களை பாதுகாக்க சிபிஎம் கோரிக்கை
சென்னை, ஆக. 20- எண்ணூரில் அடிக்கடி வெளியேறும் நச்சு வாயு மற்றும் துர்நாற்றத்தை தடுத்து நிறுத்தி பொது மக்களை பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து திருவொற்றியூர் வடக்கு பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல் முதல மைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சென்னை எண்ணூர் பகுதியில் தொடர்ந்து சுற்றுப்புறச்சூழல் மாசடைந்து மக்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் எண்ணூர் முழுவதும் நச்சுவாயு மற்றும் மக்கள் நுகர முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியது. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகினர். ஏற்கெனவே கடந்த மாதம் பக்கிங்காம் கால்வாயில் எண்ணை கலந்து முகத்துவாரம் வழியாக கடலில் கலந்தது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் மோச மான அளவில் பாதிக்கப்பட்டன. இது குறித்து 25.7.2024 அன்று முதலமைச்சருக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் புகார் அளித்திருந்தோம். தொடர்ந்து இந்த பகுதி பாதிப்புக் குள்ளாகி வருகிறது. 2023ஆம் ஆண்டு கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் இருந்த போது தாங்கள் தலையிட்டு திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதியில் நச்சு வாயுவை கட்டுப்படுத்துவதற்கும், காற்று மாசுபடு வதை தடுப்பதற்கான வல்லுநர் குழு அமைத்து சிறப்புத் திட்டங்களை அறி வித்தீர்கள். ஆனால், இதுவரை மேற்படி சிறப்புத் திட்டங்கள் எதுவும் அமலானதாக தெரியவில்லை. அதிகாரிகளும் மிகுந்த அலட்சியத்துடன் செயல்படுகிறார்கள். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய பாதிப்பு வரும் போது பொது மக்கள் அச்சத்துடன் ஒன்று சேரும்போது காவல்துறையை வைத்து மிரட்டும் போக்கும் உள்ளது. எனவே, தாங்கள் தலையிட்டு சுற்றுச் சூழல் மாசுபடுவதை தடுத்து எண்ணூர் பகுதி மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.