தொழிலாளர் விரோத சட்டத்தை கண்டித்து புதுச்சேரியில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி, செப். 22 - தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் இயற்றியதை கண்டித்து புதுச்சேரியில் சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஒன்றிய பாஜக அரசு 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்த நிலையில், தொழிற்சங்கங்கள் நூறாண்டு காலம் போராடி பெற்ற 44 தொழிலாளர் நல சட்டங்களை 4 தொகுப்புகளாக திருத்தம் செய்து அறிவித்துள்ளது. சட்டம் இன்றளவும் முழுமையாக அமலுக்கு வரவில்லை என்றாலும் அமல்படுத்துவதற்கு ஒன்றிய பாஜக அரசு தீவிரமாய் முயற்சியை மேற்கொண்டு வருவதை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் சேது செல்வம் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில பொதுச்செயலாளர் சீனு வாசன், நிர்வாகி கொளஞ்சியப்பன், ஏஐடியூசி மாநிலத் தலைவர் அபிஷேகம், தொமுச மாநில நிர்வாகி அண்ணா அடைக்கலம், ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கறுப்பு கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.