சென்னையில் செய்தியாளர்களிடம் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராடி வரும் விவசாய சங்கங்களை அழைத்து பேசாமல், மத்திய அரசு சட்டங்களை ஆதரிக்கும் சங்கங்களை அழைத்து பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் காத்திருப்புப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்தடுத்தகட்ட போராட்டங்களை திட்டமிட உள்ளோம்.விழுப்புரத்தில் கந்துவட்டி கொடுமை யால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கந்துவட்டி கொடுமையால் தற்கொலை தொடர்கதையாக உள்ளது. கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தை பயன்படுத்தி தற்கொலைகளை தடுக்க வேண்டும்.கேரளாவில் கடந்த ஓராண்டு காலமாக சிபிஐ, என்ஐஏ விசாரணை என இடது ஜனநாயக முன்னணி அரசை சீர்குலைக்க அனைத்து நடவடிக்கைகளையும் பாஜக மேற்கொண்டது. ஜனநாயக விரோத, சீர்குலைவு வேலைகளை மக்கள் நிராகரித்துள்ளதையே கேரளஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கேரள மக்கள் மாநகராட்சி, நகராட்சி,மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம்,கிராம பஞ்சாயத்துகளில் இடது முன்னணியை வெற்றி பெற வைத்துள்ளனர். கேரளமக்களுக்கும், இடதுமுன்னணிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எத்தகைய தீர்ப்பை அளித்தார்களோ அதே தீர்ப்பை வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலிலும் அளிப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.