கருப்பு கருணா மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருணா அவர்களின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது, வேதனை அளிக்கிறது. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமுஎகசவின் முழுநேர ஊழியராகவும், பன்முக கலை இலக்கிய செயற்பாட்டாளராகவும் செயல்பட்டவர் தோழர் கருணா . மாணவர், வாலிபர் இயக்கங்களில் இணைந்து செயல்பட்ட அவர், தமுஎகசவின் மாநில தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். திருவண்ணாமலையில் துவங்கிய கலை இலக்கிய இரவு என்ற நிகழ்வு தமிழகம் முழுவதும் பற்றிப் பரவியது. அந்த வடிவத்தை உருவாக்கியவர்களில் கருணா முக்கியமானவர். நாடகம், குறும்படம் என செயல்பட்ட அவர் சமூக ஊடகங்களிலும் முற்போக்கு கருத்துக்களை தொடர்ந்து எழுதி வந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களில் ஒருவராகவும் திகழ்ந்த தோழர் கருணாவின் மறைவு, தமிழக முற்போக்கு கலை இலக்கியத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமுஎகசவினருக்கும், தோழர்களுக்கும் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.