tamilnadu

அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளம் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

சென்னை, டிச. 12 - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அடையாளப்படுத்திய அதிகாரி களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பட்டதா; அல்லது கைவிடப்பட்டதா? என விளக்கம் அளிக்க சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தாமாக முன்வந்து விசார ணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந் தார். இந்த வழக்கு, நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வில் செவ்வா யன்று (டிச. 12) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிஐ தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  மாவட்ட ஆட்சியர், சார்பு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், மனுதாரர் ஹென்றி திபேன், ஒரே ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக  சிபிஐ தாக்கல் செய்த குற்ற பத்திரிகையை,  மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் (சிபிஎம் தொடர்ந்த வழக்கில்) நிராகரித்துள்ளதைக் குறிப்பிட்டு, இந்த சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றாலும், அவர்களுக்கு எதிராக குற்றம் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்று வாதிட்டார். 

மேலும், முறையாக விசாரணை நடத்தாத நிலையில் இந்த வழக்கை சிபிஐ  மீண்டும் விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த  உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அப்போது நீதிபதிகள், ஒரே ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டு, மற்ற காவல்துறையினருக்கு எப்படி நற்சான்று வழங்கப்பட்டது என சிபிஐ தரப்புக்கு கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளதால் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் சிபிஐ விசாரணையில் எந்த தவறும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார். சிபிஐ விசாரணையில் உள்ள குறைகளைச் சுட்டிக்  காட்டினால் அந்த அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மீண்டும் விசாரணை நடத்தினால், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய இன்னும் பத்து ஆண்டுகளாகும் என்று தெரிவித்த நீதிபதிகள், துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெக தீசன் ஆணையம் அடையாளம் காட்டிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா அல்லது நடவடிக்கைகள் கைவிடப்பட்டதா? என விளக்கம் அளிக்க சிபிஐக்கு உத்தரவிட்டனர்.

மேலும், சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையின் நகலை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 19-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

;