சேலத்தில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மீது தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை கும்பல் நடத்திய கொடூர தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை எதிர்த்து போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமியை இன்று (13.07.2023) காலையில் சமூக விரோதக் கும்பலைச் சேர்ந்த ரௌடிகள் கத்தி, கம்பி உள்ளிட்ட கொடூர ஆயுதங்களைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமுற்ற பெரியசாமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமூக விரோதிகளின் இந்த காட்டுமிராண்டித்தனமான கொலைவெறித் தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
சேலம் மாநகரப் பகுதிகளில் தொடர்ந்து போதைப் பழக்கத்திற்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை எதிர்த்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, சேலம் மாநகராட்சி 58ஆவது வார்டு பகுதிகளில் கவுன்சிலரும், அவருடைய கணவர் சதீஷ் மற்றும் ரௌடிகளும் காவல்துறையினரின் துணையோடு தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிராக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வரும் சதீஷ் திட்டமிட்டு அவரது ஆட்களுடன் பெரியசாமி மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளார். அவரது டிப்பர் லாரியையும், லாரி கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளார். இத்தாக்குதல்களில் ஈடுபட்ட நான்கு பேர்களில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால், இக்கும்பலுக்கு தலைவனாகவும், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்து வரும் சதீஷ் என்பவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இது கண்டனத்திற்குரியது.
சமூக விரோதக் கும்பல்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் திருச்சியில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது சமூக விரோத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த கொலைவெறித் தாக்குதலை நடத்திய லாட்டரி சீட்டு விற்பனையாளர் சதீஷ் என்பவரை உடனடியாக சேலம் மாநகர காவல்துறையினர் கைது செய்திட வேண்டுமெனவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்டு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திட வேண்டுமெனவும், படுகாயமுற்ற பெரியசாமிக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.
இந்த கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டனம் முழங்கிட வேண்டுமென கட்சி அணிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.