tamilnadu

img

என்.சங்கரய்யாவுக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை:
விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யாவின் 99வது பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் தொலைபேசி வாயிலாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்மநாபன், டி.கே.ரங்கராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தி.க.தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் 99-வது பிறந்தநாளினைக் காண்பது பொதுவாழ்வில் ஈடுபடும் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்வாகும். பொதுவுடைமைக் கொள்கையினை வாழ்வின் இலட்சியமாக ஏற்றுக்கொண்டு, பதவி சுகங்களை எதிர்பாராமல், எளிய மக்களின் நலனுக்காக வாழ்வை அர்ப்பணித்து, தியாகத் தழும்புகளையே  பதக்கங்களாகக் கொண்டவர். பொதுவாழ்வில் ஈடுபடுவோர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழும் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா அவர்கள் நூற்றாண்டு விழா கண்டு, பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்திட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிறுவனர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் அகவை 99 இல் அடியெடுத்து வைக்கும் நாளில், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் மேலும் பல்லாண்டு வாழ்வாங்கு வாழ்ந்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வாழ்த்துகிறது.தோழர் என்.சங்கரய்யா மாணவப் பருவத்தில் தொடங்கிய அரசியல் பொது வாழ்வை கொள்கை நெறி நின்று அமைத்துக் கொண்டவர்.விவசாயிகள் இயக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றியவர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  தமிழ்நாடு மாநிலக் குழு செயலாளர், மத்தியக்கமிட்டி உறுப்பினர் என்ற உயர் பொறுப்புகளில் செயலாற்றியவர். மூன்று முறை தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர்.கம்யூனிஸ்டு இயக்கத்தின் ஒற்றுமை, ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியமாகும் என்பதை வலியுறுத்தி வருபவர்.பெருவணிக குழும நிறுவனங்கள் மதவெறி சக்திகளின் துணையோடு அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கும் காலத்தில், நாட்டுக்கும் மக்களுக்கும் விரோதமான கொள்கைகளை செயல்படுத்தி வரும் நிலையில், அதனை எதிர்கொள்ள, போராடி முறியடிக்க, தோழர் என் சங்கரய்யா போன்ற மூத்த தலைவர்களின் பங்களிப்பு காலத்தின் தேவையாகும்.அவர் நீடு வாழ்க, பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறோம்.

கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், லட்சிய வீரர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் 99ஆம் ஆண்டு அகவையில் நுழைகிறார் என்று அறிகிற பொழுது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.வாழ்நாள் எல்லாம் கொள்கை, போராட்டம், சிறைவாசம், தியாகம் என்பதே அவரது வாழ்க்கையின் தடுமாற்றமில்லாத தடங்களாகும். அவரது பொது வாழ்வு திராவிடர் கழகத்தில் இருந்துதான் தொடங்கியது என்பது பலரும் அறியாத முக்கியச் செய்தி. முதுமையிலும் மேடை ஏறிவிட்டால், முழக்கம் எப்போதும் கர்ச்சனையாகவே கேட்கும். எளிமையும் பண்பும் அவரது அணிமணிகள். தாம்பரம் கழகப் பொறுப்பாளர்களுடன் சென்ற ஆண்டு நேரில் சென்று வாழ்த்துக் கூறினோம்.அவரது நூற்றாண்டை அடுத்த ஆண்டு முற்போக்கு இயக்கங்கள் இணைந்து கொண்டாடும். திராவிடர் கழகம் அவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது.

;