சிபிஎம் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மறைவுக்கு, கட்சியின் அரசியல் தலைமைக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.
சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா (102) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:
"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், நாட்டின் மிக மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா காலமானார். அவரது மறைவுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது ஆழ்ந்த துயரத்தையும், அஞ்சலியையும் உரித்தாக்குகிறது. தோழர் சங்கரய்யாவுக்கு வயது 102.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவராக இருந்த சங்கரய்யா நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். கல்லூரி இறுதித் தேர்வுக்கு முன்னதாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாகவே தனது பட்டத்தை பெற இயலவில்லை. தொடர்ந்து எட்டு ஆண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், நாடு விடுதலை அடையும் தருணத்தில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
1940இல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சங்கரய்யா ஒன்றுபட்ட கட்சியில், தமிழ்நாட்டில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக பரிணமித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் ஒருவர் அவர். தமிழ்நாட்டில் கம்யூனிச இயக்கத்தை கட்டி வளர்ப்பதில் மிகப் பெரும் பங்காற்றியவர். 1995 முதல் 2002 வரை கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செயலாளராக செயலாற்றினார்.
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 1967, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டவர். 1977,1980 ஆம் ஆண்டுகளில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராகவும் செயல்பட்டார்.
நாட்டில் விவசாயிகள் இயக்கத்தை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றியவர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார்.
தோழர் சங்கரய்யா ஒரு சக்திமிக்க பேச்சாளர் ஆவார். கம்யூனிச அரசிலையும், கொள்கைகளையும் எளிமையான முறையிலும், உறுதியாகவும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் அவர். அர்ப்பணிப்புமிக்க மார்க்சிஸ்ட். கட்சிக்காக தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர். பொது வாழ்வில் தூய்மையின் இலக்கணமாக, எளிமையின் சிகரமாக மிக உயர்ந்த பண்புகளை கடைபிடித்தவர்.
அவரது மறைவால், கம்யூனிஸ்ட் இயக்கம் உன்னதமான நெறிகள் கொண்ட ஒரு மகத்தான தலைவரை இழந்திருக்கிறது. அவரது நினைவுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. கட்சியின் தோழர்களுக்கும் அவரது இரண்டு மகன்களுக்கும், குடும்பத்தினருக்கும் இதயப்பூர்வமான ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.