ஈரோடு:
ஈரோட்டில் கட்டுமான நிறுவன அலுவலகம், வீட்டில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபதி அசோசியேட்ஸ் என்ற பெயரில் பிரபல கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் உள்பட பல்வேறு அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. மேலும், ரியல் எஸ்டேட் தொழில், மசாலா தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திங்களன்று மாலை ஈரோடு காளைமாட்டு சிலை அருகே தங்கபெருமாள் வீதியில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 30 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.அப்போது அலுவலகத்தின் கதவை அடைத்து விட்டு உள்ளே சென்ற அதிகாரிகள் அங்குள்ள பணியாளர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், அவர் களிடம் இருந்த செல்போன்களை அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர். அங்குள்ள தொலைபேசியை பயன்படுத்த தடை விதித்தனர்.இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை வாங்கி சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட தொடங்கினார்கள். இதேபோல் ஈரோடு அருகே கஸ்பாபேட்டையில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டிலும் வருமானத் துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து வீடு முழுவதும் சல்லடை போட்டு சோதனை செய்தனர்.
வருமானத்துக்கு ஏற்ப உரிய வரி செலுத்தப்பட்டு உள்ளதா? என்று அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தினார்கள். இந்த சோதனை நள்ளிரவு தாண்டியும் தொடர்ந் தது. முதல் நாள் சோதனையில் கணக்கில் வராத பணம் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் செவ்வாயன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நீடித்து வருகிறது. காளைமாடு சிலை அருகே உள்ள கட்டுமான நிறுவன அலுவலகம் வெளிப்புறமாக பூட்டப்பட்டு உள்ளது. உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதேபோல் கஸ்பா பேட்டை பகுதியில் உள்ள உரிமையாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர். ஈரோடு, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சோதனை முடிவில் தான் எவ்வளவு பணம், ஆவணம் கைப்பற்றப்பட்டுள்ளது? என்பன போன்ற விவரம் தெரியவரும்.